மத்திய அரசு vs நீதித்துறை...உரசல் போக்கை தொடர்ந்து உயர் நீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகள் பரிந்துரை..கொலீஜியம் முடிவு..!
நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், 7 நீதித்துறை அதிகாரிகள் மற்றும் 2 வழக்கறிஞர்களை பல்வேறு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.
ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
சமீபத்தில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் உரசல் போக்கு நிலவி வரும் நிலையில், 7 நீதித்துறை அதிகாரிகள் மற்றும் 2 வழக்கறிஞர்களை பல்வேறு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில், ராமச்சந்திர தத்தாத்ராய ஹுதார், வெங்கடேஷ் நாயக் தவரனிக் ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
அதேபோல, வழக்கறிஞர் நீலா கேதார் கோகலேவை பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு கொலீஜியம் ஒப்புதல் அளித்தது. நீதித்துறை அதிகாரி மிருதுல் குமார் கலிதாவை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கி பரிந்துரைத்தது.
ஆந்திராவைப் பொறுத்தவரை, நீதித்துறை அதிகாரிகளான பி. வெங்கட ஜோதிர்மாய் மற்றும் வி கோபாலகிருஷ்ண ராவ் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்க கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
Supreme Court collegium recommends appointment of judges to Gauhati and Manipur High Courts https://t.co/uvbLsxBqlB
— Bar & Bench (@barandbench) January 10, 2023
நீதித்துறை அதிகாரிகளான அரிபம் குணேஷ்வர் சர்மா மற்றும் கோல்மேய் கைபுல்ஷில்லு கபுய் ஆகியோரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.