திருமணமான பெண்ணுடன் சம்மதத்துடன் பாலியல் உறவு.. பாலியல் வன்கொடுமையா? நீதிமன்ற கருத்து.. வழக்கு விவரம் என்ன?
குற்றம் சாட்டப்பட்டவர் ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் தவறான திருமண வாக்குறுதியின் கீழ் மனுதாரரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது
ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆண் ஒருவர் உறுதியளித்து, அவர்களுக்கு இடையேயான உடல் உறவு நிகழும் நிலையில் அதில் வாக்குறுதியை மீறுவது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376-ன் கீழ் பாலியல் வன்புணர்வாகக் கருதப்படாது என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை அடுத்து வியாழன் அன்று பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை வழக்கிலிருந்து விடுவித்தது.
2018-ம் ஆண்டு கொல்லம் மாவட்டத்தில் போலீசார் தொடர்ந்த பாலியல் வன்புணர்வு வழக்கை நீதிபதி கவுசர் எடப்பாடி தலைமையிலான தனி பெஞ்ச் ரத்து செய்ததுடன்... திருமணமான பெண், அவருடன் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள முடியாது என்று தெரிந்தும் அவருடன் தானாக முன்வந்து உடலுறவு கொண்டால், அதற்கு நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஆஸ்திரேலியாவிலும், இந்தியாவிலும் தவறான திருமண வாக்குறுதியின் கீழ் மனுதாரரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் திருமணம் செய்து கொள்வதாக பலமுறை உறுதியளித்ததையடுத்து பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவித்ததாக அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். திருமணமான போதிலும், அந்தப் பெண் தனது கணவரைப் பிரிந்து விவாகரத்துக்கான ஆவணங்களை தயார் செய்துள்ளார்.
மனுதாரரின் விரிவான அறிக்கையின்படி, பாலியல் உறவுகள் ஒருமித்த இயல்புடையது என்பது தெளிவாகிறது என்று நீதிமன்றம் கூறியது. அந்த பெண் திருமணமானவர் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவரின் திருமண வாக்குறுதி வழக்கில் நிற்காது என்றும் சட்டப்படி திருமணம் செய்ய முடியாது என்பது பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நன்றாக தெரியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
“இதுபோன்ற நடைமுறைப்படுத்த முடியாத மற்றும் சட்டவிரோதமான வாக்குறுதி ஐபிசியின் பிரிவு 376 இன் கீழ் வழக்குத் தொடர ஒரு அடிப்படையாக இருக்க முடியாது. சட்டப்பூர்வமான திருமணம் என்ற நம்பிக்கையைத் தூண்டிய பிறகு அவர்கள் உடலுறவு கொண்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர் மீது எந்த வழக்கும் இல்லை. மோசடி குற்றம் எனக் குறிப்பிடும்படியான ஆவணம் எதுவும் இவ்வழக்கில் இல்லை” என்று வழக்கை ரத்து செய்யும் போது நீதிமன்றம் கூறியது.
கடந்த மாதம் இதே போன்ற ஒரு வழக்கில், அதே பெஞ்ச் ஆணுக்கு ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்து, அவருடன் உடல் உறவைத் தொடர்ந்தால்...திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் மீதான பாலியல் வன்புணர்வு என்கிற குற்றம் நிற்காது என்று தீர்ப்பு வழங்கியது. இதை அடுத்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் மீதான வழக்கை இதன் அடிப்படையில் நீதிமன்றம் ரத்து செய்தது.