Donald Trump: இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
எங்கு எந்த பிரச்னையை பேசப் போனாலும், இந்தியா-பாகிஸ்தான் மோதலை ஊறுகாய் போல் தொட்டுக்கொள்கிறார் ட்ரம்ப். புதின் உடனான பேச்சுவாத்த்தைக்குப்பின் பேட்டியளித்துள்ள அவர், என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்த சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளார். இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கிடையில் அணு ஆயுத மோதலைத் தடுக்க அமெரிக்கா உதவியது என்ற தான் ஏற்கனவே கூறியதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மே மாத மோதலின்போது பெரும் சேதத்தை சந்தித்த பின்னர், பாகிஸ்தான் கோரியதாலேயே மோதல் முடிவுக்கு வந்தது என்று இந்தியா கூறிவருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கவனத்தை ஈர்ப்பதற்காக டிரம்ப் செய்து வரும் இந்த செயலுக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்தது.
பேட்டியின்போது இந்தியா-பாக். போரை நிறுத்தியதாக மீண்டும் கூறிய ட்ரம்ப்
அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "உயிர்களைக் காப்பாற்றுவதே" தனது முக்கிய குறிக்கோள் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இதையடுத்து, உலகைக் காப்பாற்ற விரும்புகிறாரா என்று அறிய முயன்ற நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், "முதலில், எல்லா சந்தர்ப்பங்களிலும் உயிர்களைக் காப்பாற்றுவது, ஏனென்றால் போர்கள் போர்கள்தான். கம்போடியாவை உதாரணமாகக் கொண்டு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் பார்க்கும்போது. இப்போது, நான் இதில் ஈடுபடவில்லை, ஆனால் நான் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈடுபட்டிருந்தேன். நீங்கள் தாய்லாந்துடன், கம்போடியாவுடன், பல வேறுபட்ட நாடுகளுடன் போராடப் போகிறீர்கள் என்று நான் சொன்னேன்," என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பேசிய அவர், அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்திருக்கக்கூடியதைத் தடுத்ததாகக் கூறினார். "இந்தியாவையும் பாகிஸ்தானையும் பாருங்கள். அவர்கள் ஏற்கனவே விமானங்களைச் சுட்டு வீழ்த்திக்கொண்டிருந்தார்கள். அது ஒருவேளை அணு ஆயுதமாக இருந்திருக்கும். அது அணு ஆயுதப் போராக மாறப் போகிறது என்று நான் சொல்லியிருப்பேன். அதைச் செய்து முடிக்க முடிந்தது," என்று அவர் கூறியுள்ளார். மேலும், "முதலாவது உயிர்கள். இரண்டாவது மற்ற அனைத்தும் என்று கூறிய அவர், போர்கள் மிகவும் மோசமானவை," என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர்
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியப் படைகள் மே 7-ம் தேதி அன்று, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்‘ என்று பெயரிடப்பட்ட தாக்குதலை மேற்கொண்டன.
இந்த துல்லிய தாக்குதலில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பதிலளித்தது, அவை இறுதியில் இந்தியாவின் வான் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இது மே 10-ம் தேதி வரை தொடர்ந்தது. அப்போது, பாகிஸ்தான் இந்தியத் தரப்பை அணுகி, போர் நிறுத்தத்தைக் கோரியது. அதைத் தொடர்ந்து இந்தியா தாக்குதலை நிறுத்தியது. ஆனால், வரி அச்சுறுத்தலுடன் வந்த தனது எச்சரிக்கையைத் தொடர்ந்தே, போர் முடிவுக்கு வந்ததாக டிரம்ப் கூறினார். இந்தக் கூற்றை இந்தியா பலமுறை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















