Rahul Launch Yatra: “பீகார் தேர்தலில் வாக்குகளை திருட விட மாட்டேன்“ - வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் சூளுரை
பீகாரில், வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில், ‘வாக்காளர் அதிகாரம்‘ என்ற பெயரில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, அங்கு வாக்குளை திருட விடமாட்டேன் என சூளுரைத்துள்ளார்.

பீகாரில், தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட முயற்சிக்கிறது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் 1,300 கிலோ மீட்டர் தூர யாத்ரிரை ஒன்றை தொடங்கியுள்ளார்.
‘வாக்காளர் அதிகார யாத்திரை‘-யை தொடங்கிய ராகுல் காந்தி
பீகாரில் வரும் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். அதன் பின்னர் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு காங்கிஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்து, வாக்குத் திருட்டு நடைபெறுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், பீகாரில் வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை‘யை இன்று தொடங்கினார் ராகுல் காந்தி. சசரத்தில் இருந்து தொடங்கிய இந்த யாத்திரையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்ஜேடி கட்சித் தலைவர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
“வாக்குகளை திருட விட மாட்டேன்“
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் நடைபெற உள்ள மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய ‘வாக்காளர் அதிகார யாத்திரை‘, அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம் என தெரிவித்தார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பயிற்சியின் மூலம், வாக்காளர்களை நீக்கி, சேர்ப்பதன் மூலம், வாக்குகளை திருட ஒரு புதிய சதி நடப்பதாக, தேர்தல் ஆணையத்தை குற்றம்சாட்டி பேசினார் ராகுல்.
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது, வாக்குத் திருட்டை எப்படி செய்கிறது என்பதை இப்போது நாடு முழுவதும் அறிந்திருக்கிறது என்றும் ராகுல் காந்தி கூறினார். மேலும், பீகாரில் தேர்தல்களை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம், ஏழைகளுக்கு அவர்களின் வாக்குரிமை மட்டுமே உள்ளது. அதை அவர்கள் பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ராகுல் சூளுரைத்தார்.
மேலும், வாக்குத் திருட்டு பிரச்னைக்கு நாங்கள் முற்றுப் புள்ளி வைப்போம் என்றும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்று அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இதற்கு முன் வாக்குகள் திருடப்பட்டதை நாடு அறிந்திருக்கவில்லை. ஆனால், வாக்குகள் எவ்வாறு திருடப்படுகின்றன என்பதை நாங்கள் செய்தியாளர் சந்திப்பில் தெளிவாக காட்டிவிட்டோம் என்று கூறிய ராகுல், மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகள் திருடப்பட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.





















