Zelensky Vs Trump: உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
ட்ரம்ப்பை கடந்த முறை சந்தித்தபோது ஏற்பட்டது போன்ற கசப்பான அனுபவத்தை தவிர்ப்பதற்காக, ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் நேட்டோவுடன் இணைந்து ஜெலன்ஸ்கி நாளை ட்ரம்ப்பை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை சந்திக்க உள்ள நிலையில், அந்த சந்திப்பில் ஐரோப்பிய தலைவர்களும், நேட்டோ அமைப்பினரும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
ஜெலன்ஸ்கி-க்கு துணையாக வரும் தலைவர்கள்
நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து, நாளை(18.08.25) ட்ரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அவரிடம், புதின் விதித்த நிபந்தனைகள் குறித்து, ட்ரம்ப் பேச உள்ளார்.
இந்நிலையில், இந்த சந்திப்பின்போது, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஜெலன்ஸ்கியுடன் நாளை பேச்சுவார்த்தையில் இணைவதை உறுதி செய்துள்ளார். அது குறித்து இன்று கூறியுள்ள அவர், அதிபர் ஜெலன்ஸ்கியின் வோண்டுகோளின் பேரில், நாளை வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்கள் உடனான சந்திப்பில் தான் இணைய உள்ளதாக தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
இவர்களுடன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மன் சான்சிலர் பிரீட்ரின் மேர்ஸ் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே ஆகியோரும் அந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் வெள்ளை மாளிகையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என்ற தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி மோதலை தடுக்கும் வகையில் நடவடிக்கை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிற்கு சாதகமான ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்துவிடக் கூடாது என்பதையும், கடந்த முறை ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பின்போது நிகழ்ந்தது போல் சர்ச்சை ஏதும் ஏற்படக் கூடாது என்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெலன்ஸ்கியுடன், ஐரோப்பிய மற்றும் நேட்டோ தலைவர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும்போது, கடந்த பிப்ரவரி மாதம் ஜெலன்ஸ்கி எதிர்கொண்ட கடுமையான சூழல் மீண்டும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த முறை சந்திப்பின்போது, ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப்பால் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே, புதின் உடனான சந்திப்பின்போது, ட்ரம்ப் ஜெலன்ஸ்கியை தவிர்த்துள்ளார். புதினை தனியாக சந்தித்து பேசிவிட்டு, அதற்கு 2 நாட்கள் கழித்தே ஜெலன்ஸ்கியை அவர் சந்திக்கிறார். இதனால், ரஷ்யாவுக்கு சாதகமான ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற கவலை ஐரோப்பிய வட்டாரத்திலும், உக்ரைனிலும் ஏற்பட்டது.
அதன் விளைவாகவே, இத்தனை தலைவர்கள் ஜெலன்ஸ்கி உடன் இணைந்து, ட்ரம்ப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர். நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




















