சோதனைகளை சாதனையாக மாற்றிய இளம்பெண்.. இளம் வயதில் பிச்சை எடுத்த பிங்கி.. இப்போ டாக்டரா கலக்குறார்!
குழந்தையாக இருக்கையில் தன்னுடைய பெற்றோர்களுடன் தெருக்களில் பிச்சை எடுத்த பிங்கி ஹரியான், கடின உழைப்பின் மூலம் தற்போது மருத்துவராகி அனைவருக்கும் ரோல் மாடல் ஆகியுள்ளார்.
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிங்கி ஹரியான். குழந்தையாக இருக்கையில் தன்னுடைய பெற்றோர்களுடன் தெருக்களில் பிச்சை எடுத்திருக்கிறார்.
மெக்லோட் கஞ் பகுதியில் குப்பை மேடுகளில் உணவுக்காக அலைந்து திரிந்துள்ளார். கடின உழைப்பின் மூலம் தற்போது மருத்துவராகி அனைவருக்கும் ரோல் மாடல் ஆகியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சென்றுள்ளார்.
பிச்சைக்காரர் டூ மருத்துவர்:
அங்கு, மருத்துவ படிப்படை முடித்த அவர், தற்போது இந்தியாவில் மருத்துவர் பணியை மேற்கொள்ள இரவு பகல் பாராமல் தேர்வுக்கு தயாராகி வருகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு, பிங்கி ஹரியான் பிச்சை எடுப்பதை திபெத்திய துறவியும் தர்மசாலாவில் இயங்கி வரும் அறக்கட்டளை ஒன்றின் இயக்குநருமான லோப்சங் ஜாம்யாங் பார்த்துள்ளார்.
சில நாட்களுக்குப் பிறகு, சரண் குத் என்ற இடத்தில் உள்ள குடிசைப் பகுதிக்குச் சென்று பிங்கி ஹரியானை மீண்டும் பார்த்துள்ளார். அதன்பிறகு, பிங்கி ஹரியானை கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என்று அவரது பெற்றோரை லோப்சங் ஜாம்யாங் கேட்டு கொண்டார்.
அதற்கு அவருடைய தந்தை காஷ்மீரி லால் ஒப்புக்கொள்ளவில்லை. பல மணி நேரம் சமாதானப்படுத்திய பிறகே, அவர் ஒப்புக்கொண்டார். தர்மசாலாவில் உள்ள தயானந்த் பப்ளிக் பள்ளியில் ஹரியான் சேர்ந்துள்ளார். இதுகுறித்து என்ஜிஓ உமாங் அறக்கட்டளையின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "ஆரம்பத்தில், ஹரியான் தனது பெற்றோர் இன்றி தவித்தார்.
சோதனையை சாதனையாக மாற்றிய பிங்கி ஹரியான்:
ஆனால், படிப்பில் கவனம் செலுத்தினார். வறுமையில் இருந்து வெளியேற அது மட்டுமே தனக்கான ஆயுதம் என நினைத்தார். பின்னர், வந்த தேர்வு முடிவுகள் அவரது அர்ப்பணிப்புக்கு சான்றாக இருந்தன. மூத்த இடைநிலைத் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இருப்பினும், அதிகப்படியான கட்டணத்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அவரால் சேர முடியவில்லை. பிரிட்டனில் உள்ள டோங்-லென் அறக்கட்டளையின் உதவியுடன், அவர் 2018 இல் சீனாவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மேலும் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் தர்மஷாலா திரும்பியுள்ளார்" என்றார்.
சிறுவயதில் இருந்தே வறுமை மிகப்பெரிய போராட்டமாக இருந்ததாகவும் வாழ்க்கையில் வெற்றிபெறுவதை லட்சியமாக கொண்டு முன்னேறியுள்ளதாகவும் பிங்கி ஹரியான் தெரிவித்துள்ளார். "சிறுவயதில், நான் சேரியில்தான் வாழ்ந்தேன். அதனால், என்னுடைய பின்னணிதான் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தது. நான் நல்ல வாழ்க்கையை விரும்பினேன்" என்றார்.