Onam Liquor Sales: அடேங்கப்பா..! ஓணம் கொண்டாட்டத்தில் கேரளாவின் மது விற்பனை இவ்வளவா?
Onam Liquor Sales: கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் திருவிழா கொண்டாட்டத்தில் கடந்த ஆண்டை விடவும் ரூபாய் 59 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Onam Liquor Sales: கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் திருவிழா கொண்டாட்டத்தில் கடந்த ஆண்டை விடவும் ரூபாய் 59 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இயற்கை கொஞ்சும் மாநிலங்களில் கேரளாவிற்கு தனி இடம் உண்டு. தென்னிந்திய மாநிலங்களில் இயற்கையால் நிரம்பி வழியும் இடமாக கேரளாவைக் குறிப்பிடலாம். சமீபத்தில் கூட மாநிலத்தின் பெயரை கேரளா என்பதில் இருந்து கேரளம் என மாற்றம் செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டு உள்ளது.
இப்படியான மாநிலத்தில் உலகமே கொண்டாடும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், கிருஸ்துமஸ், ரம்ஜான், ஐய்யப்பன் சீசன் போன்றவற்றுடன் உலகக்கோப்பை கால்பந்து தொடரும் கொண்டாடப்படும். அப்படியான இந்த மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இணைந்து கொண்டாடும் திருவிழா என்றால் அது ஓணம் திருவிழாதான். இந்த திருவிழாவைக் கொண்டாட, உலகின் எந்தப் பகுதியில் வேலை செய்தாலும் சரி, படித்துக்கொண்டு இருந்தாலும் சரி, உடனே புறப்பட்டு கேரளாவிற்கு வந்து விடுவர். இப்படியான கொண்டாட்டத்தை மிகவும் வெகு விமர்சையாக நடத்த மாநில அரசும் தீவிரமாக களமிறங்கி பம்பரமாக வேலை செய்யும். இது மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளும் விழாவைச் சிறப்பிக்க தங்கள் பங்கிற்கு பொதுமக்களுக்கு துணை நிற்பர். இப்படியான ஒணம் திருவிழாதான் ஒட்டு மொத்த கேரளாவையும் ஒரு சேர குதூகளத்தில் துள்ளிக்குதிக்கச் செய்யும் திருவிழா.
பண்டைய காலம் துவங்கி இன்று வரை கொண்டாட்டங்கள் என்றால் அதில் மதுவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இப்படியான நிலையில் இந்த ஆண்டு ஓணம் திருவிழாக் காலம் என குறிக்கப்பட்ட 10 நாட்களில் இம்முறை ரூபாய் 759 கோடிக்கு ஒட்டுமொத்த கேரளாவிலும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 59 கோடி அதிகம் ஆகும். மேலும் சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட மதிப்பீட்டை விடவும் 20 சதவீதம் அதிகம்.
அரசு நேரடியாக மாநிலம் முழுவதும் விற்பனை செய்யும் மதுபானம் மற்றும் பீர் மொத்த விற்பனையாளரான பெவ்கோவின் தரவுகள், ஓணத்திற்கு ஒரு நாள் முன்னதாக உத்ராடம் அன்று (ஆகஸ்ட் 28) மாநிலம் முழுவதும் உள்ள மதுபான விற்பனைக் கடைகளில் ரூ.116 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளது.
ஓணம் திருவிழாக் கொண்டாட்ட விற்பனை மொத்தம் ரூபாய் 759 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதால், வரிகள் மூலம் மாநில அரசு 675 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
அரசு நடத்தும் திருவாங்கூர் சுகர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டின் கணக்குப்படி ஓணம் தினத்தன்று மட்டும் ஆறு லட்சம் பேர் மது வாங்கியதாக தெரிவித்துள்ளது. ஓணத்தையொட்டி மது விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு ஆகஸ்டில், மொத்த மது விற்பனை ரூபாய் ஆயிரத்து 799 கோடியை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மதுவை விட ரூபாய் 277 கோடி அதிகம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூபாய் ஆயிரத்து 522 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது இல்லாமல் கேரளாவில் கள் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடு என்பது இல்லை என்பதும் கவனிக்கவேண்டியதாக உள்ளது.