Manipur Tension: உச்சகட்ட பதற்றம்? மற்ற மாநிலங்களுக்கும் பரவும் இனக்கலவரம்..மிசோரத்தில் இருந்து வெளியேறும் மெய்தி சமூகத்தினர்
மிசோரமில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மெய்தி சமூக மக்கள் நேற்று முதல் மாநிலத்தில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
மணிப்பூரில் பழங்குடியினர் (ST) அந்தஸ்தை கேட்டு போராடிவரும் மெய்தி சமூகத்திற்கும், அதை எதிர்த்து வரும் குக்கி பழங்குடி சமூகத்திற்கு இடையே நடந்து வரும் இனக்கலவரம் நாட்டியை உலுக்கி வருகிறது. மணிப்பூரில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய சாதி பிரிவினராக இருப்பவர்கள் மெய்தி சமூகத்தினர்.
அதேபோல, கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மலைப் பிரதேசத்தில் எந்த வித வசதிகளும் இன்றி வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியினரான குக்கி சமூகத்தினர். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்து வரும் இனக்கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள்தான்.
தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய மணிப்பூர் சம்பவம்:
பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதம், இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவங்கள் எல்லாம் மெல்ல வெளிச்சத்திற்கு வர தொடங்கியுள்ளது.
மற்ற மாநிலங்களில் தொடரும் பதற்றம்:
இந்த நிலையில், பழங்குடியினருக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களால் அண்டை மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. தங்களின் சொந்த பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மிசோரத்தில் இருந்து வெளியேறும்படி மெய்தி சமூகத்தினரை பாம்ரா (PAMRA) அமைப்பு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. பிரிவினைவாதிகளாக இருந்தவர்கள் ஒன்றிணைந்து தொடங்கிய அமைப்புதான் பாம்ரா.
இதையடுத்து, மிசோரத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மெய்தி சமூக மக்கள் நேற்று முதல் மாநிலத்தில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். இம்பாலின் துலிஹால் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் 60 பேர் வந்து இறங்கியுள்ளதாக விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அய்ஸ்வால் மற்றும் மிசோரத்தின் பிற பகுதிகளிலிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலம் மெய்தி மக்கள் பலர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர் அரசு வெளியிட்ட தகவலின்படி, "மிசோரம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் உட்பட மிசோரமில் சுமார் 2,000 மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களில் 50 விழுக்காட்டினர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள். மற்ற பாதி பேர் பெரும்பாலும் தெற்கு அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து மிசோரமின் டிஐஜி லல்லியன்மாவியா, மிசோரம் ஆயுதப் படை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியனின் தளபதிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அய்ஸ்வாலில் உள்ள மெய்தி சமூக மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
மெய்தி சமூகத்தினரை வெளியேறும்படி பாம்ரா அமைப்பு எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மிசோரம் அரசு அய்ஸ்வால் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. மிசோரமில் உள்ள மிசோ சமூகத்தவரும் குக்கி சமூகத்தவரும் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.
அதேபோல, மியான்மரில் உள்ள சின்ஸ் சமூகத்தவரும் வங்க தேசத்தில் உள்ள சின் குக்கி சமூகத்தவரும் குக்கி சமூகத்தவருக்கு தொடர்புடையவராக கருதப்படுகிறார்கள்.