Covid JN.1 Variant: வேகமெடுக்கும் கொரோனா! கர்நாடகாவை தொடர்ந்து இனி சண்டிகரிலும் முகக்கவசம் கட்டாயம்!
கர்நாடகாவை தொடர்ந்து சண்டிகரிலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Covid JN.1 Variant: கர்நாடகாவைத் தொடர்ந்து சண்டிகரிலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா:
கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து, கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கியது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர் ஒமைக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தியது.
இச்சூழலில், கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. JN.1 புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரே நாளில் கேரளாவில் 265 பேருக்கு கொரோனா:
இதற்கிடையில், இந்தியாவில் நேற்று வியாழன்கிழமை மட்டும் 328 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளது. கேரளாவில் மட்டும் ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கர்நாடகாவில் 13 பேருக்கும், தமிழ்நாட்டில் 15 பேருக்கும், குஜராத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிராவில் 8 பேருக்கும், ஆந்திரா, சத்தீஸ்கரில் தலா 3 பேருக்கும், பீகாரில் 2 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், கொரோனாவால் கேரளாவில் மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். எனவே, கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 328 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது.
மாஸ்க் அவசியம்:
கேரளாவில் கொரேனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, கர்நாடகாவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தற்போது சண்டிகரிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஎன் 1 புதிய வகை கொரோனா கண்டறியப்பட்ட பிறகு, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க