Ponmudi: தண்டனை பெற்ற பொன்முடி - அதிர்ச்சியில் திமுக- மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு என்ன?
’பொன்முடி அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளரும் மட்டுமல்ல, முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெடுநாள் நண்பர்’
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 வருட சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். தண்டனையை 30 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதால் சற்று ஆஸ்வாசப்பட்டிருக்கிறார் பொன்முடி.
அதிர்ச்சியை ஏற்படுத்திய தீர்ப்பு
இருந்தாலும் இந்த தீர்ப்பு திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பொன்முடியை 2016ல் விடுவித்த நிலையில், அதனை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் பல ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. தீர்ப்பின்போது தானும் தன் மனைவியும் நிரபராதி என நீதிபதியை பார்த்து பொன்முடி கைக்கூப்பி சொன்னபோதும் இருவரும் தங்களது மருத்துவ ஆவணங்களை சமர்பித்து தண்டனையை குறைக்க வேண்டும் என்று கேட்டபோதும், அதற்கு செவிசாய்க்காத நீதிபதி ஜெயசந்திரன் இருவருக்குமே மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்திருக்கிறார்.
தூத்துக்குடிக்கு சென்ற தகவல் – முகம் மாறிய முதல்வர்
பொன்முடி வழக்கில் தீர்ப்பு வெளியானபோது தூத்துக்குடியில் இருந்த முதல்வருக்கு அவரது உதவியாளர் தினேஷ் மூலம் நீதிமன்றத்தில் இருந்து தகவலை சொல்லியிருக்கின்றனர். அந்த தகவலை கேட்ட முதல்வரின் முகம் உடனே மாறியிருக்கிறது. அந்த மாற்றம் அவர் வெள்ள நிவாரணம் வழங்கிவிட்டு, நெல்லையில் வந்து செய்தியாளர்களை சந்திக்கும் வரை தொடர்ந்தது.
மு.க.ஸ்டாலினின் நெடுநாள் நண்பர் பொன்முடி
அமைச்சராக மட்டுமின்றி மு.க.ஸ்டாலினின் நெடுங்கால நண்பராகவும் திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் மாவட்ட செயலாளராகவும் இருக்கும் பொன்முடிக்கு ஏற்பட்ட சறுக்கலில் திமுகவின் முக்கிய தளகர்த்தர்களே சற்று தடுமாறிதான் போயியுள்ளனர். உச்சநீதிமன்றம் சென்று பொன்முடிக்கு விடுதலையை பெற்றுத் தருவோம் என்று திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் சொல்லியிருந்தாலும் முப்பது நாட்களுக்குள் அது கிடைக்குமா என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது.
என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் ?
எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது அமைச்சராக இருக்கிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால், அந்த வழக்கில் தான் அப்பழுக்கற்றவர் என்பதை நிரூபிக்கும் வரை பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பேசியவர், இன்று என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இயல்பாகவே எழுந்திருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வெவ்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வரும் நபர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் அதிமுக, பாஜகவில் இருந்து எழுந்திருக்கிறது. இருப்பினும், வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை யாரையும் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது என்பதால் அமைச்சரவையில் எந்த மாற்றத்தையும் முதல்வர் இப்போதைக்கு செய்யமாட்டார் என்றே தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வலிமையான வாதத்தையும் ஆவணங்களையும் எடுத்து வைக்க உத்தரவு
இருப்பினும், சட்ட சிக்கலை சந்தித்து வரும் திமுகவின் முக்கிய புள்ளிகள் கவனமுடன் வழக்குகளை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை எடுத்து வைப்பதுடன் நிரபராதி என்று நிரூபணம் செய்வதற்கான போதிய ஆவணங்களையும் உடனடியாக ஒவ்வொரும் தயார் செய்யும்படியும் அவர் அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறார்.
அதோடு, ஒவ்வொரு அமைச்சர் மீது இருக்கும் வழக்கு விபரங்கள் என்னென்ன ? வழக்குகளின் தற்போதைய நிலை என்ன ? இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக முடியுமா ? அல்லது பாதகமாகும் என்பதையெல்லாம் தொகுத்து தனக்கு அறிக்கையாக அளிக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோவிற்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.