PM Modi: "பல முறை கீழே விழுந்திருக்கேன்; பள்ளிக்கு போக சாலைய கட்டி தாங்க" - பிரதமரிடம் உரிமையுடன் கேட்ட காஷ்மீர் சிறுமி!
சாலை அமைத்து தர வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரில் 6 வயது சிறுமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதுவது வழக்கமான ஒன்று தான். சில நேரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் அவ்வப்போது கடிதம் எழுதுவதும் வழக்கம் தான். சில சமயம், பிரதமரும் மாணவர்களுக்கு பதில் கடிதம் எழுதுவார். சமீபத்தில் கூட, உத்தர பிரதேசத்தில் 6 வயது சிறுமி விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், தற்போது ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சாலை அமைக்க கோரிக்கை:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டம் ஃபங்யால் என்ற பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 101 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் மாற்றுத் திறனாளி மாணவர்களும் உள்ளனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கு செல்லும் பாதை மிக மோசமான நிலையில் உள்ளதாக தெரிகிறது. குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் இந்த சாலையில் வண்டிகள் செல்ல முடியவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அப்படி வண்டிகள் சென்றால் விபத்து ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதனால், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த பள்ளியில் அதிகளவில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் படித்து வருவதால், அவர்கள் இந்த மோசமான சாலையில் செல்ல சிரமப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். இதனால், இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 வயது சிறுமி:
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு 6 வயது மாற்றுத் திறனாளி சிறுமி கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ” என் பெயர் காஜல். உதம்பூர் மாவட்டத்தின் ஃபங்யால் எல்லைக்குள் வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன். இப்பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உட்பட மொத்தம் 101 பேர் படித்து வருகிறோம். நாங்கள் பள்ளிக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் விபத்துகளும் அவ்வவ்போது ஏற்படுகிறது.
வண்டிகளில் கூட செல்ல முடியாது நிலையில் இருக்கிறோம். இதனால், பள்ளிக்கு நடந்து செல்லும்போது பலமுறை சாலையில் கீழே விழுந்திருக்கிறேன். நான் மட்டும் இல்லை. என் கூட வரும் நண்பர்களுக்கும் இதே பிரச்னை தான். எனவே, சாலையை அமைத்து தர வேண்டும். சாலையை அமைத்து சிறந்த கற்றல் சூழலை உருவாக்கி தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உதம்பூர் ஆணையரான ரஞ்சீத் சிங் கோட்வால் கூறுகையில், "இந்த விஷயத்தை அவரது கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு கவனத்திற்குக் கொண்டு சென்றதற்கு சிறுமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று சிறுமியின் கோரிக்கை விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்வேன்" என்றார்.