Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Emergency Declared Day: இந்தியாவில் எமர்ஜென்சியை அமல்படுத்தி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
Emergency Declared Day: எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திரா காந்தியை உந்தித் தள்ளிய, முக்கிய நிகழ்வுகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
1975ல் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம்:
ஜூன் 25, 1975 அன்று நள்ளிரவில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பு மார்ச் 21, 1977 வரை அமலில் இருந்தது. இந்திரா காந்தி மக்களவக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே, அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பில் இந்த அறிவிப்பை இந்திரா காந்தி வெளியிட்டார் . அப்போது, "குடியரசு தலைவர் அவசரநிலையை அறிவித்துள்ளார். பீதி அடையத் தேவையில்லை" என தெரிவித்தார்.
அவசர நிலைக்கான காரணங்கள்:
தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது மட்டுமே அவசர நிலையை அமல்படுத்தியதற்கான காரணம் அல்ல. 1971ம் ஆண்டு வங்கதேச போரை வென்று இருந்தாலும், அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளை அவர் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
- குறிப்பாக போரால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.
- எதேச்சதிகார அணுகுமுறை மற்றும் நீதித்துறை போன்ற நிறுவனங்களின் அந்தஸ்தை தகர்த்தது மற்றும் பிரதமர் அலுவலகத்திடம் அதிகாரத்தை குவிப்பது ஆகியவற்றால் நாடு இதுவரை கண்டிராத அமைதியின்மையை எதிர்கொண்டது
- பொதுத் தலைவர்கள் மீது கொலை முயற்சிகள் அரங்கேற, ரயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிஸ்ரா வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்
- குஜராத்தில் மாநில அரசுக்கு எதிராக வெடித்த போராட்டட்தால் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேறியது
- இந்த நிகழ்சுகள் முழு நாட்டிலும் வளர்ந்து வந்த சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையை சுட்டிக்காட்டியது. இதுதொடர்பாக ஆலோசகர்கள் பலமுறை இந்திரா காந்தியை எச்சரித்தனர்
- 1974ம் ஆண்டு மே மாதம் நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமான ரயில்வே ஊழியர் சங்கம், நாடு தழுவிய ரயில்வே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இந்திரா காந்தி அரசாங்கத்தால் கொடூரமாக நசுக்கப்பட்டது, இது ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கைது செய்தது மற்றும் அவர்களது குடும்பங்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றியது.
அவசர நிலை பரிந்துரையும், இந்திரா காந்தி முடிவும்..!
இதுபோன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் உள்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு, அரசுக்கு எதிரான மனநிலை வலுவாக இருந்தது. எனவே,”உள்நாட்டு கலவரங்களால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது” என குறிப்பிட்டு மேற்கு வங்கத்தின் அப்போதைய முதலமைச்சர் சித்தார்த்த ஷங்கர் ரே அவசர நிலையை முன்மொழிந்துள்ளார். ஆனால், முதலில் இந்திரா காந்தி அதனை நிராகரித்துள்ளார். இத்தகைய சூழலில் அவரது வெற்றியே செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க, உடனடியாக நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்திரா காந்தியின் வாக்குறுதியும், உண்மையான கள நிலவரமும்..!
அவசரநிலை பிரகடனம் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டாம் என இந்திரா காந்தி வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த சட்டத்தின் விளைவு மிக மோசமாக இருந்தது என்பதே உண்மை. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு பிறகும் இந்த அவசர நிலை புதுப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. அந்த வகையிலான இந்த கொடூரமான 21 மாதங்களில், சிவில் உரிமைகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் குறைக்கப்பட்டது மற்றும் வெளியிடப்படும் எந்தவொரு தகவலும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை பெற வேண்டும். மனித உரிமை மீறல்கள் தினசரி நடக்க, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட மக்களை விசாரணையின்றி போலீசார் சிறையில் தள்ளினர். ஒருவழியாக அவசரநிலை முடிவுக்கு வந்து 1977ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றின் கருப்பு தினங்களாக இன்றளவும் கருதப்படும் இந்த அவசர நிலை காலகட்டமானது, இன்றளவும் காங்கிரசின் தீராப்பழியாக தொடர்கிறது.