41 கனடா தூதரக அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பும் இந்தியா..? காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் விவகாரம் காரணமா?
இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் இந்த செய்திக்கு இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்த குற்றச்சாட்டே, உலக நாடுகள் முழுவதும் பரபரப்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்தியா மீது கனட பிரதமர் பரபர குற்றச்சாட்டு:
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், இது அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கூறியது.
இந்த விவகாரம் தொடர்பாக கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை அந்நாடு கனடாவை விட்டு வெளியேற்றியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவும் கனடாவின் தூதர் ஒருவரை வெளியேற்றியது. இந்த சம்பவம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு நாட்டு உறவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கனடா நாட்டை சேர்ந்த 41 தூதரக அதிகாரிகளை அவர்களின் நாட்டுக்கே திருப்பி அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள், அவர்களை தங்கள் நாட்டிற்கே திருப்பி அழைத்து கொள்ளும்படி கனடாவிடம் இந்தியா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு நாட்டு உறவில் விரிசல்:
இதுகுறித்து புகழ்பெற்ற 'தி பைனான்சியல் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியில், "அக்டோபர் 10ஆம் தேதிக்கு பிறகும், அந்த தூதர்கள் இந்தியாவில் இருந்தால், அவர்களுக்கு அளிக்கப்பட்ட வந்த தூதரக சலுகைகள் பறிக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது. இந்தியாவில் கனட தூதரக அதிகாரிகள் 62 பேர் பணியாற்றி வருகின்றனர். மொத்த எண்ணிக்கையில் இருந்து 41 பேர் குறைக்கப்பட வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு நாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் இந்த செய்திக்கு இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை. முன்னதாக, இந்திய தூதர்கள் பற்றி பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனடாவில் இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையின் சூழல நிலவி வருகிறது. அச்சுறுத்தும் சூழல் இருக்கிறது" என்றார்.
சிக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளனர். குறிப்பாக, சமீப காலமாக காலிஸ்தான் அதரவாளர்கள் செய்யும் செயல் இந்திய அரசை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய சம்பவம் மத்திய அரசை கொந்தளிப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.