மீன் உற்பத்தியில் அசத்தும் இந்தியா...இத்தனை லட்சம் டண்ணா!
Fish Production In India: இந்தியாவின் மீன் உற்பத்தி 184 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மீன் உற்பத்தி 95 லட்சம் டன்னிலிருந்து 184 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்துள்ளார்.
நீலப் புரட்சியின் கீழ் ₹3,000 கோடி, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கு ₹7,500 கோடி, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்துக்கு ₹20,050 கோடி, பிரதமரின் மீன் உற்பத்தியாளர் வளர்ச்சி திட்டத்துக்கு ₹6,000 கோடி என பல்வேறு மீன்வளத் துறை திட்டங்களுக்கு மத்திய அரசு கணிசமாக நிதி ஒதுக்கியிருப்பதையும் அமைச்சர் எடுத்துரைத்தார். மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் மீனவர்கள் ₹5 லட்சம் வரை கடன் பெறலாம் என திரு ஜார்ஜ் குரியன் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 2,300 மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் நிறுவப்படும் என்று அறிவித்தார். இவை மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும், அவசர மருத்துவ உதவியைப் பெறவும், சர்வதேச கடல் எல்லைகளை நெருங்கும்போது எச்சரிக்கைகளைப் பெறவும், கடலில் மீன்கள் கிடைப்பது குறித்த உடனடித் தகவல்களைப் பெறவும் உதவும் என்று அவர் கூறினார்.

