Draupadi Murmu : கிண்டி மருத்துவமனை திறப்பு...ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் முர்மு...!
ஜூன் மாதம் 5ஆம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.
Draupadi Murmu : ஜூன் மாதம் 5ஆம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று சென்னை வந்து மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார்.
கிண்டி மருத்துவமனை
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ரூ.250 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மேலும், 1000 படுக்கைகளுடன் கூடிய சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ. 230 கோடி ரூபாய் செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் மக்கள் பலன் பெறும் வகையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்தநாளங்கள், குடல் – இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளது.
குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
இந்நிலையில், இன்று காலையே சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். டெல்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்றனர்.
Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. pic.twitter.com/RAyl97rvuq
— President of India (@rashtrapatibhvn) April 28, 2023
இதனை அடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பு 10 முதல் 15 நிமிடம் வரை நடைபெற்றது. அப்போது, கிண்டியில் ரூ. 230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு "Karunnidhi - A Life" என்ற புத்தகத்தை பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று, ஜூன் மாதம் 5ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கிறார். மேலும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார் திரௌபதி முர்மு.
குடியரசுத் தலைவராக பதவியேற்று மூன்றாவது முறையாக தமிழ்நாட்டிற்கு ஜூன் 5ல் வருகை தர உள்ளார் திரௌபதி முர்மு. இதற்கு முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி திரௌபதி முர்மு தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். கோவை ஈஷா யோகா மையத்தில் இசை நிகழ்ச்சிகளுடன் நடந்த மகா சிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் முர்மு தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு, மார்ச் 18ஆம் தேதி கன்னியாகுமரிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகை தந்தார். குமரிக்கு வந்த திரௌபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டார். அதன்பிறகு தற்போது, தமிழ்நாட்டிற்கு ஜூன் 5ஆம் தேதி வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.