One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
One Nation One Election: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம்
இதுதொடர்பான அறிவிப்பில், “அரசியலமைப்பு (நூற்று இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதா, 2024 மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா மீதான கூட்டுக் குழுவின் முதல் அமர்வு வரும் ஜனவரி 8, 2025 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில், டெல்லியில் உள்ள பார்லிமெண்ட் ஹவுஸ் அன்னெக்ஸின் குழு அறை ”டி”யில் நடைபெறும். இதில் மசோதா தொடர்பாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் (சட்டமன்றத் துறை) பிரதிநிதிகளால் விளக்கமளிக்கப்படும். கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தாள்கள் தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் சரியான நேரத்தில் விநியோகிக்கப்படும். உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள தயாராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு:
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான மசோதாக்கள் தொடர்பான கூட்டுக் குழுவின் முதல் கூட்டம், பாஜக உறுப்பினர் பி.பி.சௌத்ரி தலைமையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்பு (129 வது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகியவை கடந்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. காரணம் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். ஆனால், பாஜக கூட்டணி அரசிடம் அந்த பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
39 பேர் கொண்ட கூட்டுக் குழு:
பல அரசியல் கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் தொடர்பான இரண்டு சட்ட வரைவுகளை ஆய்வு செய்வதற்கான குழுவில் இடம்பெற விருப்பம் தெரிவித்ததால், குழுவின் பலம் 31ல் இருந்து 39 ஆக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்தது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் மணீஷ் திவாரி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா, பன்சூரி ஸ்வராஜ் மற்றும் சம்பித் பத்ரா உட்பட பல முதல்-முறை மக்களவை உறுப்பினர்களும் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுவில் மக்களவையில் இருந்து 27 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் இருந்து 12 உறுப்பினர்களும் உள்ளனர்.
90 நாள் அவகாசம்:
சட்ட மசோதாவை ஆய்வு செய்யவும், கருத்துக்களை மதிப்பாய்வு செய்யவும் மற்றும் பரிந்துரைகளை முன்மொழியவும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல்களுக்கான அரசாங்கத்தின் வாதம், அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் ஏற்படும் நிதி மற்றும் நிர்வாகச் சுமையைக் குறைத்தல், நிர்வாகத்திற்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைத்தல் மற்றும் நிரந்தரத் தேர்தல் பிரச்சாரத்தை விட வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த அனுமதித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது. ஒரே இந்த கூட்டுக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து மக்களவைக்கு அனுப்பினாலும், நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம்.