Delhi murder case: டெல்லி கொலை வழக்கு: ஷ்ரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக அளித்த ஆப்தாப்: வெளியான திடுக் தகவல்
ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, வெட்டப்பட்ட அவரின் உடல் துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தபோதே, மருத்துவர் ஒருவரை ஆப்தாப் டேட் செய்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை காதலர் ஆப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பல்வேறு விதமான பகீர் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள தகவல் கேட்போரின் மனதையே பதறவைத்துள்ளது.
ஷ்ரத்தாவை கொலை செய்த பிறகு, வெட்டப்பட்ட அவரின் உடல் துண்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தபோதே, மருத்துவர் ஒருவரை ஆப்தாப் டேட் செய்திருக்கிறார். பம்பிள் என்ற மொபைல் டேட்டிங் செயலி மூலம் அந்த மருத்துவரை அவர் சந்தித்துள்ளார்.
Shraddha murder case: Delhi Police recovered some weapons that were used to chop off Shraddha's body. Police have also recovered Shraddha's ring that Aftab had gifted to another girl whom he invited to his flat: Delhi Police Sources
— ANI (@ANI) November 28, 2022
மேலும், ஷ்ரத்தாவின் மோதிரத்தை அந்த மருத்துவருக்கு ஆப்தாப் பரிசாக அளித்ததாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், டெல்லி கொலை தொடர்பாக ஒரு சிசிடிவி காட்சி வெளியாக அனைவரையும் பதற வைத்தது. அதில், அதிகாலை ஆப்தான் தனது வீட்டின் வெளியே ஒரு பையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த சிசிடிவி கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை கொண்ட பையை எடுத்துச் சென்றதாக காவல்துறை அவரை சந்தேகித்தனர். அந்த சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அன்று இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்துள்ள முதல் காட்சி சிசிடிவி காட்சி இதுவாகும்.
முன்னதாக, ஆப்தாப்பின் குடியிருப்பில் இருந்து கனமான கூர்மையான கருவிகளை டெல்லி போலீஸார் மீட்டனர். அவை ஷ்ரத்தா வாக்கரின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அவரது சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை காவல்துறை மீட்டு வருகின்றனர். குருகிராமில் உள்ள ஆப்தாப் பணியிடத்தில் இருந்து கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர்.
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.