அதிரடி காட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்... சரத் பவார் உத்தவை தொடர்ந்து கேசிஆர்... பாஜகவுக்கு எதிராக பக்கா ஸ்கெட்ச்..!
உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், சரத் பவாருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்துள்ளார்.
டெல்லி அரசில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திய அரசு சமீபத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது.
டெல்லி அவசர சட்டம்:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் துணை நிலை அளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் நியமிக்கவும் மாநில அரசுக்கே முழு அதிகாரம் உள்ளது; அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என்றும் உச்சநீதிமன்றம் டெல்லி அரசுக்கு சாதகமாக அண்மையில் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை தொடர்ந்து மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வந்து, டெல்லி அரசில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் போன்ற விஷயங்களில் முடிவு எடுக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு, இந்த அவசர சட்டம் பெரும் தலைவலியை தந்துள்ளது.
கேசிஆரை சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்:
இந்த விவகாரத்தில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆதரவை கோரி வருகிறார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், மாநிலங்களவையில் டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதாவை கொண்டு வரும்போது, எதிர்க்கட்சிகளின் உதவியோடு அதை தோற்கடிக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு வருகிறார்.
அதற்காக, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்ததாக, தெலங்கானா முதலமைச்சரும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவை சந்திக்க உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக பாஜக அரசு இயற்றியுள்ள அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, ஜனநாயகத்துக்கு விரோதமான அவசரச் சட்டத்துக்கு ஆதரவாக நாளை ஹைதராபாத்தில் தெலுங்கானா முதலமைச்சரை சந்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெறுவதற்காக, சரத் பவாரின் உதவியை கெஜ்ரிவால் நாடியுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.