"வழிபாட்டு தலங்கள் சட்டம் பொருந்தாது" ஞானவாபி வழக்கில் திருப்பம் - அலகாபாத் உயர் நீதிமன்றம் பரபர கருத்து
ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோயிலை மீண்டும் கட்ட அனுமதிக்க வேண்டும் என இந்து தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். இந்த மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா? என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் தரப்பு மனு தாக்கல் செய்தனர்.
ஞானவாபி மசூதி வழக்கில் திருப்பம்:
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரித்த இந்தியா தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதற்கு மத்தியில், மசூதி இருக்கும் இடத்தில் கோயிலை மீண்டும் கட்ட அனுமதிக்க வேண்டும் என இந்து தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மசூதி கமிட்டி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின்போது, ஞானவாபி மசூதி வளாகமே கோயிலின் ஒரு பகுதி என இந்து தரப்பினர் வாதிட்டனர்.
இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. மசூதி கமிட்டியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், "ஞானவாபி விவகாரத்தில் வழிபாட்டு தலங்கள் சட்டம் பொருந்தாது" என தெரிவித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு:
இந்த வழக்கு நாட்டின் இரண்டு முக்கிய சமூகங்களை பாதிக்கிறது. எனவே, ஞானவாபி வழக்கில் 6 மாதங்களில் விரைவாக தீர்ப்பளிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் கேட்டுக் கொண்டார்.
வழிபாட்டு தலங்கள் சட்டம், 1991இன்படி, "கடந்த 1947ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அன்று, வழிபாட்டு தலங்கள் எப்படி இருந்ததோ, அதன்படியே தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, இந்த சட்டத்தை மீறி, ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும், அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.