"எல்லா இடத்துலயும் தோண்ட நினைக்கிறாங்க" மசூதி விவகாரம்.. பாஜகவை வெளுத்து வாங்கிய அகிலேஷ்!
சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சம்பல் நகரில் வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக உ.பி. முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் சம்பல் நகரில் உள்ள மசூதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதற்காக அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சம்பல் நகரில் வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசம் சம்பரில் நகரில் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த மசூதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சம்பல் மசூதி விவகாரம்:
உள்ளூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் இருந்து சம்பல் நகரில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. வன்முறை சம்பவங்களை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சம்பல் நகரில் வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக உபி முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "எல்லா இடங்களிலும் தோண்ட விரும்புபவர்களால் ஒரு நாள் இந்த நாட்டின் சகோதரத்துவத்தை இழக்க நேரிடும்.
கொதித்தெழுந்த அகிலேஷ்:
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அது நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (பின்னர்) ஷாஹி ஜமா மசூதிக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. எதிர் தரப்பின் வாதத்தை கேட்கும் முன்பே ஒரு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. நவம்பர் 19ஆம் தேதி, ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த நவம்பர் 24ஆம் தேதி, மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. என்ன நடக்கிறது என்பதை அறிய மக்கள் கூடினர். ஆனால், ஒரு அதிகாரி அவர்களை திட்டி இருக்கிறார். லத்தி சார்ஜ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வழங்கிய மற்றும் தனியார் ஆயுதங்களால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்றார்.
"12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஐந்து அப்பாவிகள் கொல்லப்பட்டனர். காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.