”இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பானதுதான்” : சைக்கிள் பயணம் செய்யும் 24 வயது வீராங்கணை
நவம்பர் 1ம் தேதி தனது சைக்கிளில் தனியாக பயணம் மேற்கொண்ட ஆஷா, அவரது சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான தடகள வீராங்கனையும், மலையேறும் வீராங்கனையுமான ஆஷா மால்வியா, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டும் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி தனது சைக்கிளில் தனியாக பயணம் மேற்கொண்ட ஆஷா, திருவனந்தபுரம் சென்றடைந்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்த 20,000 கி.மீ அவர் சைக்கிளில் பயணம் செய்ய உள்ளார்.
“பெண்களுக்கு இந்தியா பாதுகாப்பற்றது என்று வெளிநாடுகளில் உள்ள பலர் நம்புகிறார்கள். இதுவரை மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பயணம் செய்து 6,700 கி.மீ. நான் கடந்து வந்த ஆறாவது மாநிலம் கேரளா, இதுவரை எல்லா இடங்களிலிருந்தும் கிடைத்த வரவேற்பும் அனுபவமும் அமோகமாக இருக்கிறது,” என்று அடுத்து தமிழ்நாட்டை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் ஆஷா கூறுகிறார். அவர் முதல்வர் பினராயி விஜயன், போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் கவர்னர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
View this post on Instagram
கொச்சியில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தைத் தவிர, கேரளாவில் தனது பயணம் மறக்கமுடியாதது என்று மேலும் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அப்படி என்ன விரும்பத்தகாத அனுபவம் என்று கேட்டதற்கு ”நான் எர்ணாகுளம் கலெக்டரை சந்திக்க முயன்றபோது அவர் மறுத்துவிட்டார். நான் காத்திருந்தபோது கலெக்டர் எனக்கு நேரம் கொடுக்காமல் சென்று விட்டார்” என்கிறார் ஆஷா. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் ஆதரவுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கினார் ஆஷா. மத்தியப் பிரதேச அரசு ஆஷாவுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட ஹைப்ரிட் சைக்கிள் ரோம்-2 மற்றும் சைக்கிள் கிட் ஆகியவற்றை வழங்கியுள்ளது.
மலையேறும் வீராங்கனையான ஆஷா, நேபாளம்-பூடான்-வங்காளதேச எல்லையில் டென்சிங் கான் (19,545 அடி) மற்றும் பிசி ராய் (20,500 அடி) ஆகியவற்றை அடைந்து நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஓஎம்ஜி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். மூன்று வயதில் தந்தையை இழந்த ஆஷா, தனது வாழ்க்கையில் பல முரண்பாடுகளை எதிர்கொண்டார்.
"எனது இந்தத் தனி பயணம் ஆகஸ்ட் 2023ல் டெல்லியில் முடிவடையும், இதை அடுத்து நமது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க விரும்புகிறேன்," என்கிறார் ஆஷா. பயணத்தை முடித்ததும், ஆஷா தனியாக வேறு சில நாடுகளுக்கு சைக்கிள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்