" விபத்தில்லா தொப்பூர் கணவாய்" - தருமபுரி எம்பியிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கட்ட மேட்டில் இருந்து போலீஸ் குடியிருப்பு வரை ஒரு தொகுப்பும் போலீஸ் குடியிருப்பு முதல் ரயில்வே இரட்டை பாலம் வரை உயர்மட்ட மேம்பால சாலை மற்றொரு தொகுப்பாகவும் அமைக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் ரூ.905 கோடியில் உயர்மட்ட பால சாலை அமைக்க வனத்துறையிடம் தடையில்லா சான்று பெற்றவுடன் பணி தொடங்கும் என தர்மபுரி திமுக எம்.பி. அ.மணியிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட எல்லையில் தொப்பூர் கணவாய் உள்ளது. இக்கணவாயின் வழியாக தேசிய நெடுஞ்சாலை எண் - 44 செல்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சாலையின் இருபுறமும் மலைகளால் சூழ்ந்த தொப்பூர் கணவாய் 3.5 கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
பாறைகளால் சூழ்ந்த இந்த கணவாய் மேடு இறக்கம் நிறைந்த பகுதியாக உள்ளதால் அதிக விபத்துகள் நடக்கிறது. தர்மபுரி மாவட்ட மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் மக்கள் பிரதிநிதிகள் வைத்த கோரிக்கையை ஏற்று அரசு உயர் மட்ட மேம்பாலம் சாலை அமைக்க ரூ.775 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
ரூ.905 கோடி திட்ட மதிப்பீடு
தற்போது ரூ.905 கோடியாக திட்ட மதிப்பீடு தயாரித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சாலை அமைக்க டெண்டர் விடும் பணி முடிந்து இத்திட்டத்தின் கீழ் தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது.
கட்ட மேட்டில் இருந்து போலீஸ் குடியிருப்பு வரை ஒரு தொகுப்பும் போலீஸ் குடியிருப்பு முதல் ரயில்வே இரட்டை பாலம் வரை உயர்மட்ட மேம்பால சாலை மற்றொரு தொகுப்பாகவும் அமைக்கப்படுகிறது.
கிராமங்களுக்கு செல்ல ரவுண்டானா
தர்மபுரி மாவட்டத்தில் 5 கிலோமீட்டர் சேலம் மாவட்டத்தில் 1.6 கிலோமீட்டர் என மொத்தம் 6.6 km தூரம் உயர் மட்ட மேம்பாலம் சாலை அமைக்கப்படுகிறது. தொப்பூர் கிராமத்திற்கு செல்லவும், மேச்சேரி சாலையில் செல்லவும் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. மேலும் கணவாயில் 90-க்கும் மேற்பட்ட பில்லர்கள் 15 அடி முதல் 30 அடி உயரம் வரை பில்லர்கள் அமைக்கப்பட உள்ளது. சர்வே பணிகள் முடிந்து நிலம் எடுக்கப்பட்டுவிட்டது. வனத்துறையிடம் இருந்து 14 ஏக்கர் நிலம் எடுக்கப்படுகிறது. இதற்காக மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வனத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று கிடைக்க வேண்டி உள்ளது.
மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த தர்மபுரி எம்பி. மணி
இந்த நிலையில் நேற்று தர்மபுரி திமுக எம்.பி., ஆ. மணி டெல்லியில் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து மனு அளித்தார். மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:- தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் பல ஆண்டுகளாக விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியாக உள்ளது. இந்த விபத்துகள் பலத்த காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை விளைவிப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் சாலை பயன்படுத்துபவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். பாதுகாப்பான பயணத்திற்கு உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் ஆறு வழிச்சாலை ஆகியவற்றை கட்டாயமாக அமைக்க வேண்டும்.
இந்த சாலை பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலையை மற்றும் ஆறு வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டம் 905 கோடி ஆகும். சாலை பயனாளிகள் எதிர்கொள்ளும் தற்போதைய சிரமங்களை நிவர்த்தி செய்யும் இதற்காக உள்கட்டமைப்பு திட்ட செயல்முறையை விரிவுபடுத்த வேண்டும்.
தர்மபுரி தொகுதியின் எம்பி என்ற முறையில் இந்த வழித்தடத்தில் வசிப்பவர்கள் மற்றும் பயணிகள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் மற்றும் ஆபத்துகளை நான் உன்னிப்பாக அறிவேன். இந்த திட்டத்தை விரைந்து முடிப்பது சாலை பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல் மென்மையான மற்றும் நம்பகமான போக்குவரத்தை உறுதி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார் மனுவை பெற்ற அமைச்சர் வனத்துறையின் தடையில்லா சான்று பெற்றவுடன் தொப்பூர் கனவாய் உயர்மட்ட மேம்பாலம் நெடுஞ்சாலை பணி தொடங்கும் என்றார்