மீண்டும் உயிரைப் பறித்த நீட்... சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்.. கலைந்த மருத்துவர் கனவு..
Neet Exam: "சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது"

"தொடர்ந்து வீட்டிலிருந்து நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார், மேலும், கடந்த இரண்டு வருடமாக தனியார் அகாடமியில் நீட் தேர்வுக்காக தயாராகியும் வந்துள்ளார்"
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் சாஸ்திரி பவன் பகுதியில், வசித்து வருபவர் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி தேவி. இவர்கள் ஐயன்சேரி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். செல்வராஜின் மூத்த மகள் தேவதர்ஷினி என்பவர், சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
மருத்துவர் கனவு
பின்னர் மருத்துவராக வேண்டும் என்ற கனவில், நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். போதிய 'கட் ஆப்' இல்லாததால், அதன் பிறகு வீட்டில் இருந்து கொண்டே நீட் தேர்வுக்காக படித்துக் கொண்டு வந்துள்ளார். 2023-ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள, தனியார் அகாடமியில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
ஏற்கனவே, மூன்று முறை நீட் தேர்வு எழுதி இப்போதைய கட் ஆப் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். நான்காவது முறையாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளார். வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார்.
"சோகத்தில் இருந்த மாணவி"
இந்தநிலையில் 27-ஆம் தேதி, சென்னை அண்ணா நகரில் உள்ள கோச்சிங் சென்டருக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பியதிலிருந்து மனது கஷ்டமாக இருக்கிறது, என மாணவி சோகத்துடன் இருந்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தை செல்வராஜ், நீ பயப்படாமல் படி என ஊக்கமளித்துள்ளார்.
செல்வராஜ் வைத்திருந்த பேக்கரிக்கு சென்று மாணவி உதவி செய்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று மாலை பேக்கரிக்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்று வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகிய மாணவி கடைக்கு திரும்பாததால், செல்வராஜ் சந்தேகம் அடைந்தார். மேலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் தொலைபேசி அழைப்புகளை எடுக்காததால், உடனடியாக தனது மனைவி தேவியை வீட்டிற்கு சென்று பார்க்குமாறு அனுப்பி வைத்தார்.
"உயிரை மாய்த்து கொண்ட மாணவி"
அங்கு சென்று பார்த்தபோது தேவதர்ஷினி வீட்டின் அறையில், இருந்த மின்விசிறியில் புடவையால் தற்கொலை செய்து கொண்டதை கண்டு தாயார் தேவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மாணவியை மீட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்து மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உடனடியாக இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கிளம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

