Chennai : சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவாக்கம்... போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை...
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் 7 முக்கிய சாலை விரிவுப்படுத்தப்படுகின்றன.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங் களில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. இதையடுத்து சென்னை மாநகரில் போக்குவரத்தை எளிமைப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டப்படி, சாலைகளுக்கான அகலங்கள் வரையறுக்கப்பட்டன. இதில் 422 சாலைகளின் திருத்தப்பட்ட உத்தேச அகல விபரங்களை சமீபத்தில் சிஎம்டிஏ வெளியிட்டது.
7 சாலைகள் விரிவாக்கம்
இந்நிலையில், சென்னையில், அண்ணா சாலை உள்ளிட்ட 10 பிரதான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவித்திருந்தது. அதில் முதற்கட்டமாக 7 சாலைகளை அகலப்படுத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள சி.எம்.டி.ஏ முடிவு செய்தது. அடுத்த 20 ஆண்டுகால மாற்றங்களை முன்வைத்து விரிவாக்கம் செய்வதற்கான ஆய்வு பணிகள் துவங்கியுள்ளதாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்தார் படேல் சாலை, அண்ணாசாலையில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் 3 கி.மீ தூரம் உள்ள சர்தார் படேல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 60 அடியாக உள்ள சாலை அகலம் 100 அடியாக மாற்றப்பட உள்ளது. எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை, மற்றும் பெரம்பூர் கேரக்ஸ் சாலைகளும் அகலப்படுத்தப்படுகின்றன. அதன்படி, எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க பண்ட் சாலை, கிரீம்ஸ் சாலை, நியூ ஆவடி சாலை ஆகியவை 18 மீட்டர் (59 அடி) வரை அகலமாகின்றன. பெரம்பூர் பேரக்ஸ் சாலையை 24 மீட்டர் (78 அடி) வரை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் குஜராத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் திட்டமிடலுக்கான தொழில்நுட்ப மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து நகரமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது, ”தற்போது சிஎம்டிஏ உத்தேசித்துள்ள சாலைகளின் புதிய அகல அளவுகளை உடனடியாக அமல்படுத்த முடியாது. சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் உள்ள கட்டடங்களை இடித்து, சாலை விரிவாக்கம் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
இப்பகுதிகளில் உள்ள பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் போது, அதற்கான அனுமதி வழங்கும் நிலையில், சாலை அகலப்படுத்துவதற்கான கூடுதல் நிலம் பெறப்படும். ஒவ்வொரு மனையிலும் இவ்வாறு பெறப்படும் நிலம் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலை அகலப்படுத்தப்படும்” என்றனர்.
2 மேம்பாலங்கள் இடிப்பு
இதேபோன்று, சென்னையில் இரண்டாவது கட்டமாக மாதவரம் - சிப்காட் சிறுசேரி வரை 45 கி.மீ., துாரத்திற்கான 'மெட்ரோ ரயில்' பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணிக்காக, இரண்டு மேம்பாலங்களின் ஒரு பகுதியில் இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது, மாதவரம் - சிப்காட் தடத்தில், அடையாறு மேம்பாலத்தின் ஒரு பகுதிக்குக் கீழே, இரட்டை சுரங்கப்பாதைகள் மற்றும் நிலத்தடி அடையாறு சந்திப்பு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அடையாறு நோக்கிச் செல்லும் பாலத்தின் இடது பகுதியை இடித்து அப்புறப்படுத்தி, அதன் அருகிலேயே, தற்காலிகமாக இரும்பு பாலம் அமைத்து, வாகன போக்குவரத்து தடங்கலின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோல, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த பின், மேற்கண்ட இரண்டு பாலங்களும் முழுமையாக சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றனர்.