செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சிஎம்டிஏ..! பலன் என்ன? முழு விபரம் இதோ
மாவட்டம் முழுவதும் ஊராட்சித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், 1971 ஆம் ஆண்டின் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்ட விதி -பிரிவு 49ன் படி, சென்னைப் பெருநகர்ப் பகுதியின் வளர்ச்சியைத் திட்ட அனுமதி வழங்குவதின் மூலமாக ஒழுங்குபடுத்துகிறது. சென்னை நகரை எந்தவித பிரச்சனையும் இன்றி பெருநகரமாக கட்ட அமைப்பதற்காக இந்த அமைப்பை தமிழக அரசு உருவாக்கியது. சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், சென்னைப் பெருநகர்ப் பகுதியில் உள்ள உள்ளாட்சி நிறுவனங்களுக்கு திட்ட அனுமதி வழங்க, தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துள்ளது.
அதன்படி, பொதுவாக அனுமதிக்கப்படும் சாதாரண வகைக் கட்டிடங்கள், தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கான கட்டிடங்கள் வணிக உபயோக மேம்பாடுகள், மனைப்பிரிவு மற்றும் சிறிய நிலப் பகுதியில் தீர்மானிக்கப்படும் மனை உட்பிரிவு ஆகிய வளர்ச்சிகளுக்கு உள்ளாட்சி மன்றங்கள் திட்ட அனுமதி வழங்கி வருகின்றன. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம், சிறப்பு வகைக் கட்டிடங்கள், தொகுப்புக் கட்டிடங்கள் மற்றும் குழுமத்தின் சிறப்பு அதிகாரங்களின் கீழ் பரிசீலனை செய்யப்படவுள்ள கட்டிடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்குகிறது, மற்றும் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அரசின் ஒப்புதலுடன் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இதுபோல அனைத்து விதமான வளர்ச்சி கட்டுமானங்களும் அனுமதியை, இந்த அமைப்பு வழங்குவதால், சென்னை மாநகரை சீரான முறையில் கட்டமைக்க இந்த அமைப்பு உதவுகிறது. சென்னை நகரை எந்தவித பாதிப்பில்லாமல் கட்டமைக்க வேண்டுமென்றால் அதனை சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களில் இருக்கும் பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இணைக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்த சில பகுதிகள் தற்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சியை சென்னை CMDA - வில் இணைக்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்காக அவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர் களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், வீடு மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மான்ய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை செங்கல்பட்டு மாவட்டம், முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வண்டலூர், மண்ணிவாக்கம், நெடுங்குன்றம், ஊரப்பாக்கம், கிளாம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் CMDA -ன் கட்டுப்பாட்டில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அனைத்து ஊராட்சிகளிலும் CMDA கட்டுப்பாட்டில் வந்தால் ஊராட்சிகளின் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்தி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை செங்கல்பட்டு மாவட்டம், முழுமைக்கும் விரிவுபடுத்திட ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது , என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் நம்மிடம் தெரிவிக்கையில், நகரை கட்டமைக்க சிஎம்டிஏ இணைப்பது நல்ல விஷயம் என்றாலும், ஆனால் முறையான திட்டமிடுதல் வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் மிகமுக்கிய மாவட்டம் இங்கு விவசாயிகள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அதேபோல விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகம் எனவே அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் முன்னேற்றம் இருக்க வேண்டும். 100 நாள் வேலை, விவசாயம் ஆகியவை பாதிக்கப்படாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. குப்பை, முறையற்ற நீர் வடிகால், மின்சார கம்பங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதேபோல ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதி சிஎம்டிஏ- வில் இருந்து வருகிறது. ஆனால் அங்கு அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்தது என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். எடுத்துக்காட்டு மறைமலைநகரில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை உட்பட எந்த வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே முறையான சுகாதாரம், சாலை மற்றும் சாக்கடை வசதிகள், மின்சாரம் ,குப்பை அகற்றும் நடைமுறை ஆகியவற்றை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அதேபோல மிகப் பெரிய நதியாக உள்ள பாலாற்று குடிநீரை மாவட்டம் முழுவதும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், இந்த திட்டம் வரவேற்கத்தக்கதே என தெரிவித்தார்.
இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் நிலத் தரகர்கள் சங்க நிர்வாகி கார்த்திக் கூறுகையில், ஊராட்சியின் வருமானம் குறைந்தாலும் வளர்ச்சி மற்றும் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும். அதேபோல பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான, வீட்டு கடன்களை பெறுவது மிக சுலபமாக இருக்கும். அதேபோல பெரிய பெரிய கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி மற்றும் கடன் வசதி ஆகியவை கிடைப்பதற்காக நிறைய வாய்ப்புகள். ஊரக பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனுமதியுடன் கட்டிடங்களை கட்டுவதை காட்டிலும் , சிஎம்டிஏ மூலம் அனுமதி பெற்று கட்டிடங்கள் கட்டுவது , நகரில் நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, மாவட்ட நிர்வாகம் சார்பில் தீர்மானம் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்த மாதிரி தீர்மானம் உட்பட அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி ஊரக வளர்ச்சித் துறைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என தெரிவித்தனர்.
இதுகுறித்த மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பெரும்பாலும் அனைத்து ஊராட்சிகளிலும் இருந்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. தீர்மானங்கள் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் நிறைவேற்றித் தருகிறார்கள். இதுவரை யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, விரைவில் அனைத்து ஊராட்சிகளில் இருந்து தீர்மானம் வந்துவிடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்
முறையான திட்டமிடலுடன் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தும் பட்சத்தில் பொதுமக்களுக்கு நன்மையை