(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: காதுவலிக்கு ஆபரேஷன்.. பரிதாபமாக பறிபோன 11ம் வகுப்பு மாணவி உயிர்..! சென்னையில் சோகம்
சென்னையில் தனியார் மருத்துவமனையில் காதுவலிக்கு சிகிச்சைப் பெற்ற 11 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் காதுவலிக்கு சிகிச்சைப் பெற்ற 11 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதுவலி:
சென்னை திருவொற்றியூர் ராஜா கடை பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவரது 16 வயது மகள் அபிராமி ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு அடிக்கடி காதுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகளை நந்தினி அழைத்து சென்றுள்ளார்.
அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அபிநயாவுக்கு ஸ்கேன் உள்ள பரிசோதனைகளை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி காலை அபிநயாவுக்கு மருத்துவமனையில் காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை முடிந்த அரை மணி நேரத்தில் அவர் தனக்கு பயங்கரமாக நெஞ்சு வலிப்பதாக நந்தினியிடம் கூறியுள்ளார்.
உயிரிழப்பு:
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவர்களை அழைத்து விவரம் தெரிவித்துள்ளார். உடனடியாக மருத்துவர்கள் எக்கோ சோதனை செய்துள்ளனர். இதில் அபிநயாவுக்கு அதிகமாக மூச்சுத் திணறல் இருப்பது தெரியவந்ததால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அபிநயா நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவர் உயிரிழந்த தகவலை கேட்ட தாய் நந்தினி,உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் கதறி அழுதது காண்போரை கண்கலங்கை வைத்தது.
சாலை மறியல்:
இதனையடுத்து திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதோடு கவனக்குறைவாகவும் செயல்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி முன்பு அபிநயாவின் தாய் நந்தினி உறவினர்கள் மற்றும் திருநங்கைகளுடன் சாலையின் இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ஜான் ஆல்பர்ட், முகம்மது நாசர் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் போலீசாரிடம் அபிநயாவின் உறவினர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் இந்த சம்பவத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.