Vilangu : விமலின் விலங்கு... பார்க்கலாமா? எப்படி இருக்கு கதை? தேறுமா தேறாதா? அலசும் விமர்சனம்!
சினிமாவாக இருந்திருந்தால், விமலுக்கு ‛கம்பேக்’ சொல்லலாம். இது வெப்சீரிஸ் என்றாலும், இதிலும் ‛கம்பேக்’ சொல்வதில் தவறில்லை.
Prashanth Pandiraj
Vimal, Iniya, Munishkanth, Balasaravanan
விலங்கு... பார்க்கும் பலர், திரைப்படம் என நினைத்து பார்த்து, எபிசோடு கடக்கும் போது தான், அத வெப்சீரிஸ் என்பதை அறிகிறார்கள். சினிமாவில் பெரிய அளவில் சோபிக்காத விமல், வெப்சீரிஸில் நடித்தால் எப்படி இருக்கும்? எந்த விமர்சனமும் வேண்டாம்.... தரமான, கலகலப்பான, த்ரில்லர் க்ரைம் ஸ்டோரி தான் விலங்கு.
பிற மொழிகளில் குறிப்பாக, இந்தியில் அதிக வெப்சீரிஸ்கள் க்ரைம், திரில்லராக சக்கை போடு போடுகின்றன. தமிழில் அவ்வப்போது த்ரில்லர்கள் வந்தாலும், அவை இந்தி தலுவலாகவே உள்ளன. ஆனால், அக்மார்க் தமிழ் சூழலில், திருச்சியை ஒட்டிய ஒரு சிறு கிராமத்தில் நடக்கும் சம்பவத்தை த்ரில்லராக கூறியிருக்கிறார்கள். உண்மையில், விலங்கு... அந்த திருப்தியை குறைக்கவில்லை.
விமல் இப்படி தான் நடிப்பார், இப்படி தான் பேசுவார், இப்படி தான் வசனம் பேசுவார் என்கிற அத்தனை ஃபார்முலாவையும் சுக்குநூறாக உடைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ். ஒரு கிராமத்தில் நடக்கும் கொலை, அந்த கொலையை கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரிக்கு நடக்கும் சோதனை, அந்த சோதனையால் வரும் வேதனை, ஒரே நேரத்தில் குடும்பம், பணி என இரு நெருக்கடிகளை சமாளித்து கரையேறுகிறாரா என்பது தான் கதை.
முனீஸ்காந்த், பாலசரவணன், ஆர்என்ஆர் மனோகர் என போலீஸ் பட்டாளங்கள் அனைவருமே, உண்மையான போலீஸாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளான உறவாகட்டும், பேச்சாகட்டும், அதிகாரமாகாட்டும் எல்லாமே இயல்பாக வெளிப்படுத்திருக்கிறார்கள். பல இடங்களில் ‛பீீப்’ இல்லாத வசனங்கள் முகம் சுழிக்க வைத்தாலும், நிஜத்தில் அது எங்கு பயன்படுத்தப்படுமோ, அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே ஆறுதல்.
சினிமாவில் மட்டுமல்ல, வெப்சீரிஸிலும் ஹீரோயின் வேஸ்ட் என்பதை, இங்கு நிரூபித்திருக்கிறார்கள். வேஸ்ட் என்று சொல்வதை விட, நீண்ட நெடிய வெப்சீரிஸில், நாலைந்து சீன் தான் இனியாவுக்கு. அப்படியென்றால், அத்தனை எபிசோடில் யாரை காட்டுகிறார்கள் என்று கேள்வி எழும்; கவலை வேண்டாம்... ‛தலையில்லாத சடலம், தடயம் தேடும் போலீஸ், போலீஸ் தேடும் அக்யூஸ்ட்...’ என அனைத்திலும் க்ரைம் சீன் தான்.
க்ரைம் என்பதற்காக இறுக்கத்தை கட்டிப்பிடித்து அழாமல், கலகலப்பாக அதை நகர்த்திருப்பது தான் இயக்குனரின் சாமர்த்தியம். பரபரப்பாக செல்லும் காட்சிகளில் கூட, காமெடியை திணித்து புதிய ஃபார்முலாவை படைத்திருக்கிறார்கள். ஒரு எபிசோட் கூட ஃபோர் அடிக்காமல், அடுத்தது என்ன என்கிற வகையில் நகர்கிறது. விமல் படமாக இருந்தாலும், விமலை விட ஸ்கோர் செய்யும் கதாபாத்திரங்கள் அங்கு அதிகம். கொஞ்ச நேரம் வந்தாலும் ரேஷ்மா கதாபாத்திரம் பேசப்படுகிறது.
அரை மணி நேரத்திலும் இந்த கதையை எடுக்கலாம், 2 மணி நேரத்திலும் இந்த கதையை எடுக்கலாம், இவர்கள் எடுத்தது போல பல எபிசோடுகளாகவும் எடுக்கலாம். பார்முலா ஒன்று தான், ஃபார்மட் தான் வேறு. அந்த வகையில் வெப்சீரிஸ் ஃபார்மட்டை கச்சிதமாக பிடித்து கலக்கியிருக்கிறார்கள்.
சினிமாவாக இருந்திருந்தால், விமலுக்கு ‛கம்பேக்’ சொல்லலாம். இது வெப்சீரிஸ் என்றாலும், இதிலும் ‛கம்பேக்’ சொல்வதில் தவறில்லை. இது கரடுமுடரான போலீசாரின் நியாயத்தை கூறும் கதை. அவர்கள் குற்றவாளிகளை அடித்து துவைக்கும் போது, அது நியாயமாகவே மனதிற்கு தோன்றும். அந்த இடத்தில் தான், அவர்கள் எண்ணம் ஜெயித்திருக்கிறது. அதே நேரத்தில், வெள்ளந்தி மனிதர்கள், குற்றவாளிகளை வெளுத்து வாங்கும் போது, வெறி கொண்ட மனிதர்களாக மாறுவது ஏன் என்பது தெரியவில்லை. ஆனால், அது தான் போலீஸ் என்கிற கருத்தும் அதில் இருக்கிறது.
விலங்கு... போலீஸ் கதை என்பதால் கையில் மாட்டும் விலங்கு என்று தான் எண்ணத் தோன்றும். ஆனால், கொடூர குற்றங்களை செய்யும் விலங்கு என்றும் கூறலாம். இதில் எந்த விலங்கை அவர்கள் தலைப்பாக வைத்தார்கள் என்பதற்கான பதில் கடைசி வரை தெரியவில்லை.
ஜீ 5 ஓடிடியில் 7 எபிசோடுகளாக ரிலீஸ் ஆகியிருக்கிறது விலங்கு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்