’சிப்பிப்பாறை நாய்கள் தெரியும்’ ராமநாதபுரம் மண்டை நாய்கள் பற்றி தெரியுமா..?
ஓடு தண்ணீரில் விட்டதெல்லாம் கடலடையும் என்பது போல கொஞ்சம் பண்பாடு கொஞ்சம் பாரம்பரியம் சேர்த்து எந்தக் கதையை நாயோடு கட்டினாலும் மக்கள் மனத்தடையும் என்பதை எல்லரும் கற்றுக்கொண்டனர் என்பதுதான் வேதனை
வேட்டைத்துணைவன் -17
கன்னி/ சிப்பிப்பாறை நாய்கள் பகுதி - 09
கடந்த கட்டுரை சிலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் தந்திருக்கக்கூடும். காரணம் கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக சாம்பல் நிற நாய்களை இணையம் தொடர்து இராமநாதபுரம்” மண்டை நாய்கள்”(Ramanathapuram Mandai Dog) என்ற பெயரில்தான் யாவருக்கும் புகட்டி வருகிறது. உண்மையில் கிடைத்தற்கரிய பல தகவல்கள்களைப் பெற இணையத்தை தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லை என்பது இங்கு யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறுத்துவிட முடியாது.
ஆனால் நாய்களைப் பொறுத்தமட்டில் இணையம் என்பது சமூக ஊடகங்களும் அதை ஒட்டி பதிவிறக்கம் கானக் காத்திருக்கும் youtube காணொளிகளும்தான். படித்தறிய, கூர் உள்ளவர்களிடம் கேட்டறிய, நேரில் சென்று கண்டறிய கறி வலித்த / நேரம் வாய்க்கப்பெறாத அதிக வேக நாய்ப் பிரியர்களுக்கு நாள் தோறும் அதுவே வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
ஓடு தண்ணீரில் விட்டதெல்லாம் கடலடையும் என்பது போல கொஞ்சம் பண்பாடு கொஞ்சம் பாரம்பரியம் சேர்த்து எந்தக் கதையை நாயோடு கட்டினாலும் மக்கள் மனத்தடையும் என்பதை எல்லரும் கற்றுக்கொண்டனர் என்பதுதான் வேதனை. சரி அந்தப் புராணம் படிக்கப் புறப்பட்டால் நான்கு ராத்திரி எழு பகல் அமர வேண்டும். நம் கதைக்கு வருவோம்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு “மண்டை நாய்கள்” என்ற வார்த்தையை எங்கேனும் யாரேனும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தது உண்டா? என்ற கேள்வியை முன்வைத்துவிட்டு கட்டுரையைத் துவங்கலாம் என்றிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் முதல் புகைப்படமானது 1980 களில் எடுக்கப்பட்டது. இதை எனக்கு அனுப்பிய சிவகாசியை சேர்த்த நண்பர் பெயர் T. K. விக்னேஸ்வரன். அவர் சிறு வயதில் இருக்கும் போது அவர்களுடைய பலசரக்கு கடைக்கு மல்லிகைப்பொருள் வாங்க அருகாமை கிராமத்தில் இருந்து வரும் மாட்டு வண்டிக்காரருடன் மூன்று மாதக் குட்டியாக வந்த நாய் பிடித்துபோக வீட்டில் வளர்க்க துவங்கியதாகச் சொன்னார். அதுவும் சிப்பிப்பாறை வட்டார கிராமம் தான். நிற்க,
மேலே ஒரு கேள்வி கேட்டிருந்தோம் அல்லவா?
பதில் தேடி நேரம் வீணடிக்க வேண்டாம். காரணம் கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் அதிகம் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பிரபலமானதும் அந்தத் தளத்தில் தங்களை பிரதிநிதித்துவப் படுத்திக் கொண்ட சிலர் இதோ நாங்கள் கன்னி / சிப்பிப்பாறை நாய்களை மீட்டு எடுத்தோம். இப்போது வேறு ஒரு நாய் இனத்தையும் மீட்டு எடுக்க உள்ளோம் அதன் பெயர் “மண்டை நாய்” என்று அறிவித்தனர். அந்த நாய்களின் புகைப்படங்கள் சூடு பிடிக்கத்துவங்கியதும் இது மண்டை அல்ல. .மந்தை ! காரணம் இது மந்தையோடு அலைகிறதே என்று பொழிப்புரை வழங்கினார். மந்தை தான் மருவி மந்தை ஆனது என்று எழுத்து புணர்ச்சி பற்றி வகுப்பும் எடுத்தனர்.
இந்த மண்டை / மந்தை ரெண்டுக்கும் பொதுவான முதல் பெயர் ஒன்று உண்டு. இராமநாதபுரம் மண்டை / மந்தை நாய் என்றே அவை அறிமுகம் ஆகின ! சரி அவ்வாறு அறிமுகம் ஆன நாய்கள் இராமநாதபுர வாட்டரத்தில் உண்டா என்றால் கட்டாயம் உண்டு. சொல்லப்போனால் மற்ற இடத்தை விட அதிக அளவில் உண்டு. ஆனால் அதே பெயரில் உண்டா? இந்தப் பெயர் பிரபலமாகி இப்படிச் சொன்னால் தான் தெரியும் என்ற நிலை வருவதற்கு முன்பு இதே பெயரில் உண்டா என்பதுதான் கேள்வி .
எப்படி கன்னி / சிப்பிப்பாறை கூர் முக வேட்டை நாய்களுக்கு பூர்வாங்கமாக உள்ளூர்களில் நிற அடிப்படையில் வெள்ளப் புள்ள, செவல, மயிலை என்று நிற பெயர்கள் மட்டும் இருந்ததோ அது போலவே இவற்றுக்கும் அப்புலேக், சாம்ப, தழுகினி, சாம்பமற என்ற நிறைகுறிகளே பிரதான பெயர்களாக இருந்தது.
இரண்டாவதாக இடம்பெரும் இந்தப் படம் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது இந்த படத்தில் இருக்கும் நாய் மதுரை அலங்காநல்லூர் புதுப்பட்டியை சேர்த்த பெரியகருப்பு அவர்களுடையது. இந்த வகை நாய்களில் அதிக புழக்கம் உள்ள அவரிடம் பேசும் போது ராம்நாட் வட்டாரம் மட்டும் அல்ல சிப்பிப்பாறை / சிவகாசி வட்டாரத்திலும் இந்த நாய்கள் இருந்தது அதை அங்கு சென்று எடுக்கும் வழக்கம் முன்பு இருந்தது என்பதையும் அறிய முடிந்தது.
அதுபோல இவற்றில் சாம்பல் பிரதானமாக எடுத்துக் காட்டப்பட்டதால் ( நினைவில் கொள்க இவற்றில் சாம்பல் ஒரு நிறம் இது போல பல நிறங்கள் உண்டு ) அதற்கும் அதன் உடல் கட்டிற்க்கும் பொருந்தும் படியான நாய்கள் பற்றிய தகவல் எங்கேனும் உண்டா என்று ஆராயும் போது poligar hound என்ற பெயரில் சில குறிப்புகள் கிடைக்கிறது( முன்னரே சொன்னது போல “poligar hound’ என்ற பெயரில் வருவான எல்லாமும் ஒரே நாய் இனம் அல்ல அது ரெண்டிற்கும் மேற்பட்ட நாயினத்திற்கு வழங்கப்படும் பொதுவான பெயர் என்பது நியாபகம் இருக்கட்டும்) வெள்ளைக்காரன் நமது பருவட்டு சாம்பல் நாய்களை poligar hound என்று பதிவு செய்து கொண்டிருந்த பொழுது நம்மவர்கள் அதை சிப்பிப்பாறை நாய்கள் என்று அழைத்து வந்தனர்.
Edward cecil ash எழுதிய Dogs : Their history and development vol. 1 க்கும் மா.கிருஷ்ணன் கலைமகள் இதழில் எழுதி வெளியான உள்ளூர் நாய்கள் கட்டுரைக்கும் வெறும் 10 ஆண்டு இடைவெளி கூட இல்லை என்பதை நினைவில் கொள்க! இந்த இடத்தில் சிப்பிப்பாறை நாய்கள் என்று சொல்வது பெரிய தலை உடல் அமைப்பு கொண்ட சாம்பல் சிப்பிப்பாறை நாய்களைத் தானே அன்றி கூர் முக அமைப்பு கொண்ட கன்னி / சிப்பிபாறை நாய்களை அல்ல ! அவை ரெண்டும் வெவ்வேறு இனங்கள் ரெண்டையும் இணைத்துக் குழப்பம் கொள்ள வேண்டாம்.
இந்தச் சாம்பல் நிற பருவட்டு உடல் தோற்றம் கொண்ட சிப்பிப்பாறை நாய்களுக்கும், அதே ஒற்ற தோற்றம் உடைய இராமநாதபுரம் மண்டை நாய்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் உண்டா என்பதை அறிவதற்கு முன்பாக இந்த ரெண்டு பகுதிகளுக்கும் உள்ள தொடர்புகளை அலசுவோம்.
ரெண்டுமே வானம் பார்த்த பூமி, ரெண்டுலும் மிக அதிக அளவில் ஆட்டுகள் / பாட்டிகள் / கிடைகள் உண்டு. பறக்க நடந்து மேய்க்கும் கீதாரிகள் உண்டு. அவர்கள் இங்கும் இவர்கள் அங்கும் மாரி மாரி போய் வந்து கொண்டு குடுத்த கதைகள் பல ஆண்டுகளாக உண்டு. அதுவே இன்நாய்கள் பரவ ஆதாரம். இன்னமும் அழுத்தமான தொடர்பு ஒன்று உண்டு.. இன்னும் கொஞ்சம் சந்தேகங்கள் எழட்டும், முடிச்சுகள் இருக்கட்டும்.. எளிதாக அவிழ்க்க அதை பயன்படுத்துவோம்.
இவ்வளவு இருக்கும் போது இந்த நாய்கள் ரெண்டிற்கும் தொடர்பு இருக்காதா? கட்டாயம் உண்டு ! எந்த அளவுக்கு என்றாள் ரெண்டுமே ஒன்று தான் என்ற அளவுக்கு ! ஆக இது முதலில் அறியப்பட்டது “சிப்பிப்பாறை” என்ற பெயரில் பின் காலம் மாரி அந்த நாய்கள் அங்கு அருகி பெயரை மங்கிய பொழுது மறுபடியும் இவை இராமநாதபுரம் மண்டை நாய் / மந்தை நாய் என்று புது அறிமுகம் கண்டது அவ்வளவு தான்.
இருந்தும் ஏன் அங்கு இது அருகியது ? இங்கு பெருகியது? பார்க்கலாம். கூர் முக நாய்களை பற்றி பேச்சு போய்க்கொண்டு இருக்கும் போது ஏன் இந்த சிப்பிப்பாறை நாய்கள் பற்றிய விசாரணை? ரெண்டுக்கும் உள்ளது வேறு பாடுகள் உணர்த்தவா அல்ல அதற்கும் இதற்கும் தொடர்புகள் உண்டா? பார்க்கலாம்.