வெயிலின் தாக்கத்தை தணிக்க தொடங்கியது தர்பூசணி சீசன் - தேனியில் களைகட்டும் விற்பனை
கோடை காலம் தொடங்கி விட்டதால் தர்பூசணி விற்பனை கம்பம், சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூடு பிடித்துள்ளது - தர்ப்பூசணி வியாபாரிகள்
தர்பூசணியின் ஒரு கீற்றில் ஒரு நாளுக்கு உடலுக்குத் தேவையான 16 சதவிகித வைட்டமின் சி கிடைத்து விடுகிறது. வைட்டமின் சி எதிர்ப்புத் திறனை உறுதிபடுத்தத் தேவையான அடிப்படை சத்து என்பது அனைவருக்கும் தெரியும், வெயில் காலங்களில் அதிகரிக்கும் தொற்றுகளில் இருந்து உடலைக் காக்க இது நமக்குத் தேவை ஆகிறது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் எட்டிப்பார்க்கத் தொடங்கி உள்ளது. மார்ச் மாத இறுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து மே மாதத்தில் உச்சம் தொட்டு ஜூன் மாதத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிவது வழக்கமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் இளநீர், பழச்சாறு, தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்கள் மூலம் உடலை குளிர்வித்து கொள்வது மக்களின் வழக்கமாக உள்ளது.
இந்த சமயத்தில் தர்பூசணி மற்றும் இதர நீர் பழங்களின் விற்பனை அதிகரித்தாலும் தற்போதே தேனி மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏப்ரல், மே மாதங்களுக்கு முன்பே மார்ச் (தற்போது) மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மதிய வேளைகளில் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் கம்பம் , சின்னமனூர், கூடலூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், தர்பூசணி வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி வியாபாரிகள் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தர்பூசணி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். கிலோ 25 ரூபாய்க்கும், மொத்தமாக விற்கும்போது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறுகின்றனர். சில்லரை விற்பனையில் ஒரு பீஸ் தண்ணீர் பழம் 20 ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும் கூறுகின்றனர்.
தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால், தர்பூசணி விற்பனை கம்பம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் தர்ப்பூசணி வியாபாரிகள். கம்பம் பகுதியில் சாலையோர கடை நடத்துபவர்கள் கூறுகையில், "நீர்ச்சத்து மற்றும் அதிக பயன் கொண்ட தர்பூசணி விற்பனை அதிகமாகவே நடைபெறுகிறது. திண்டிவனம் பகுதியில் இருந்து தர்பூசணி பழங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறோம்.
தர்பூசணி விலை பொதுவாக ஒரு டன் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை பழத்தின் தரத்திற்கேற்ப விற்பனையாகும். ஆனால் தற்போது வரத்து குறைந்துள்ளதால் ஒரு டன் 12,000 முதல் 14, 000 வரை விற்பனையாகிறது. பழங்களை லாரியில் ஏற்றி விற்பனை செய்ய எடுத்துக்கொண்டு வருவதற்கான டீசல் செலவும் அதிகரித்து காணப்படுவதால் பழங்களின் விலை சற்று உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்த இருந்தாலும், மக்களின் தேவைக்கேற்ப வட மாவட்டங்களிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு தான் வருகிறது. பழங்களின் வரத்து அதிகரித்தால் தொடர்ந்து சில்லரை விற்பனை காண விலையும் குறையும்" என்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

