Telugu Cinema Shooting: படப்பிடிப்பு தடைக்கு இடையில் பூஜை போட்ட ’புஷ்பா 2’ படக்குழு... தெலுங்கு சினிமா துறைக்கு என்னதான் ஆச்சு?
முன்னதாக, வசூல் இழப்பைத் தவிர்க்க தெலுங்கு படங்கள் திரையரங்குகளில் வெளியான 10 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிடுவது என்றும் தயாரிப்பாளர்கள் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.
தெலுங்கு சினிமாக்களின் லாபம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தி வைக்கப்படுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது.
சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் படத்தின் தயாரிப்பு செலவுகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில், திரையரங்குகளில் வசூல் பெருமளவு சரிந்தது. குறிப்பாக கொரோனா அலைகளுக்குப் பிறகு டிக்கெட் விலையைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவதைத் தவிர்த்து வருகிறார்கள்.
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட பின் சினிமா தயாரிப்பு செலவுகள் அதிகரித்திருப்பது, நடிகர்களுக்கு தரப்படும் அதிக சம்பளத்தை குறைக்க இயலாமல் திரைத்துறை திணறுவது, டிக்கெட் கட்டணத்தை உயர்த்த தெலங்கானா, ஆந்திர மாநில அரசுகள் மறுப்பு தெரிவித்து வருவது, ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் திரைப்பட தயாரிப்பை நிறுத்துவது என கடந்த ஆக.1ஆம் தேதி தெலுங்கு திரை உலகைச் சேர்ந்த 24 சங்கங்கள் கூட்டாக முடிவு செய்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
கடந்த ஜூலை 31ஆம் தேதி இந்த பந்த் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கு திரைப்பட கவுன்சில், "தொற்றுநோய்க்குப் பிந்தைய வருவாய் சூழ்நிலைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் உள்ளிட்ட இந்தப் பிரச்சினைகள் குறித்து தயாரிப்பாளர்கள் சமூகம் விவாதிப்பது முக்கியமானதாகிவிட்டது. எங்கள் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதும், ஆரோக்கியமான சூழலில் படங்களை வெளியிடுவதை உறுதி செய்வதும் எங்கள் பொறுப்பு. இதனை முன்வைத்து அனைத்து உறுப்பினர்களும் தானாக முன்வந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தீர்மானங்களைக் உருவாக்கும் வரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்." எனத் தெரிவித்திருந்தனர்.
RRR, புஷ்பா போன்ற பெரிய படங்களைத் தவிர, பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிக மந்தமான வரவேற்பையே பெற்றுள்ளன. இச்சூழலில் பொது திரையரங்குகளில் டிக்கெட் விலையை 100 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகக் குறைக்க தயாரிப்பாளர்கள் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது.
மேலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஜிஎஸ்டியை சேர்த்து 150 ரூபாயில் இருந்து 120 ரூபாயாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, வசூல் இழப்பைத் தவிர்க்க படங்கள் திரையரங்குகளில் வெளியான 10 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியிடுவது என்றும் தயாரிப்பாளர்கள் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.
படப்பிடிப்புகள் குறித்த அவசரத் திட்டம் அடுத்த வாரம் வகுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இனிமேல் எந்த நடிகருக்கும் நாள் வாரியாக சம்பளம் வழங்கப்படாது என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
View this post on Instagram
மீண்டும் செப்டெம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தெலுங்கு படப்பிடிப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று ’புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த பந்த் முடிவு குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.