Bombay Jayashri Health: மூளையில் ரத்தக்கசிவு.... மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ! சோகத்தில் ரசிகர்கள்..!
கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், சென்னைக்கு விமானம் மூலம் அவர் அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூளையில் ரத்தக்கசிவு:
முன்னதாக இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர் பூலில் ஓட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த பாம்பே ஜெயஸ்ரீ, நேற்று (மார்ச்.23) இரவு கடுமையான கழுத்து வலி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இன்று காலை மற்றும் மதிய உணவு உட்கொள்ள அவர் அறையை விட்டு வெளியே வராத நிலையில் அவரை உடன் தங்கியிருந்தோர் சென்ற சோதித்தபோது மயங்கிய நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோமா:
இந்நிலையில், கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், சென்னைக்கு விமானம் மூலம் அவர் அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் திர இசைப் பாடல்களையும் பாடியுள்ளார். சமீபத்தில் பாம்பே ஜெயஸ்ரீக்கு மியூசிக் அகாடமியால் சங்கீதா கலாநிதி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இசை
இசைக் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ சென்ற 2021ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். கல்கத்தாவில் பிறந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ, தன் சிறுவயது முதலே கர்நாடக இசையைக் கற்றுத்தேர்ந்து, பின் பிரபல கர்நாடக இசைப் பாடகியாக உருவெடுத்தார்.
எனினும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2001ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தில் இடம்பெற்ற ‘வசீகரா’ பாடலின் மூலம் பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
ஹாரிஸ் ஜெயராஜூடன் ஹிட் காம்போ
அதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடி வந்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ, மஜ்னு படத்தில் இடம்பெற்ற 'முதற்கனவே’ , கஜினி படத்தில் இடம்பெற்ற ’சுட்டும் விழிச்சுடரே’, தாம் தூம் படத்தில் ’யாரோ மனதிலே’, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ’உனக்குள் நானே’, காக்க காக்க படத்தில் ’ஒன்றா ரெண்டா ஆசைகள்’, நண்பேன்டா படத்தில் இடம்பெற்ற ’ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா’ எனத் தொடர்ந்து பாடல்கள் பாடி திரை இசை ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் நலம்பெற ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.