TN 12th Result: தள்ளிப்போகும் பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலமைச்சருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் தொடங்கிய பொதுத் தேர்வு
கொரோனா தொற்று, ஊரடங்குக்குப் பிறகு மீண்டதை அடுத்து, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வழக்கமான காலத்தில் தொடங்கி நடைபெற்றன. இந்த ஆண்டு 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆப்செண்ட்
மாணவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.
இதற்கிடையில் தமிழ் மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதேபோல 45 ஆயிரம் பேர் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுத வரவில்லை என்றும் தகவல் கசிந்தது. அதைத் தொடர்ந்து இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடத் தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியானது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வையே மாணவர்கள் எழுதாதது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரசு ஆலோசனை
பொதுத் தேர்வில் மாணவர்கள் கலந்துகொள்ளாதது குறித்து அரசு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, ''மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருக்க, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது. வேலைக்காக இடம் பெயர்தல், பயம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை'' என்று தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
இந்த நிலையில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள், நீட் தேர்வை எழுதும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், நீட் தேர்வு முடிந்த பிறகு 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிடம் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை நீட் தேர்வுக்குப் பிறகு வெளியிடலாமா என்று பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்தது. இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலமைச்சருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்காத வகையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.