திருச்சி அருகே பயங்கரம்; மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு நகை - பணம் கொள்ளை அடித்த மர்ம நபர்கள் தலைமறைவு.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் திருட்டு, கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழிபறி, திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது என புகார் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மூதாட்டியை கொலை செய்து நகை - பணம் கொள்ளை
திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபர் நாகப்பன். இவரது மனைவி கல்யாணி (69). இவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் உள்ளே சென்ற மர்ம நபர்கள் கல்யாணி அணிந்திருந்த 17 பவுன் தங்க நகை, ஒரு பவுன் வைரத் தோடு மற்றும் வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் வீட்டின் அடுப்படியில் கல்யாணி மர்மான முறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை டி.எஸ்.பி.மரியமுத்து மற்றும் ஆய்வாளர் குணசேகரன் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி மீண்டும் வீட்டின் அருகே வந்து நின்றது.
இதனை தொடர்ந்து மணப்பாறை காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் தொடர் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.