Telangana: பணம் கட்டுறியா? போட்டோவ மார்பிங் பண்ணவா? சீன லோன் செயலியின் அடாவடி!! சிக்கிய இருவர்!!
சீன லோன் செயலி மூலம் கடன் வழங்கும் பாலமாக இருந்த பெங்களூருவைச் சேர்ந்த கால் சென்டர் நிறுவனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சீன லோன் செயலி மூலம் கடனைக் கொடுத்துவிட்டு பலவந்தமாக மிரட்டலை தொடர்ந்த பெங்களூருவைச் சேர்ந்த கால் சென்டர் நிறுவனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செயலி மூலம் கடன் வாங்கிய நபர்கள் தவணையை திருப்பிச் செலுத்துவதில் ஏற்பட்ட சுணக்கத்திற்காக அவர்களை தரக்குறைவாக விமர்சித்தும், உயிருக்கு அச்சுறுத்தல் காட்டும் வார்த்தைகளால் மிரட்டியும் பணம் வசூலிக்க முயன்றதாக இந்த கால் சென்டர் மீது புகார் எழுந்தது. இந்த கால்செண்டர் தெலங்கானாவில் இயங்கி வந்துள்ளது
இந்த கால் சென்டரின் நிறுவனர் மற்றும் இணை நிறுவனரும் சீனாவைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டைக் கொண்டு ஆறு லோன் செயலிகளை இயக்கி வந்துள்ளனர்.
இவ்வாறாக தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்து லோன் பெறும் வாடிக்கையாளர்கள் அதை முறையே திருப்பிச் செலுத்தாவிட்டால் அவர்களை மிக மோசமாக மிரட்டியுள்ளது இந்த கால் சென்டர். செயலியை தரவிறக்கம் செய்த நபர்களின் செல்போனில் ஊடுருவி அவர்களின் புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைத் திரட்டிய இந்த நிறுவனம் தவணையை திருப்பிச் செலுத்தாத போதெல்லாம் புகைப்படத்தை மார்ஃப் செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவோம். அந்தரங்க சேட் உள்ளது அதை வெளியிடுவோம் என்று மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தின் சில செயலிகள் மூலம் ரூ.2 லட்சம் வரை கடன் பெற்ற 30 வயது பெண் அதைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்பட்டால் மிரட்டப்பட்டுள்ளார். 2 லட்சத்தை 7 நாட்களில் திருப்பிச் செலுத்த கெடு விதித்த நிறுவனம் அவரை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த ஐதராபாத் போலீஸார், பெங்களூரு கால் சென்டர் உரிமையாளர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 29 மொபைல் போன்கள் மற்றும் 73 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் சம்பந்தப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்தவர் கைதை ஊகித்து சீனாவுக்கே தப்பி ஓடிவிட்டார்.
கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் மக்களுக்கு கடனுதவி எப்போதும் தேவைப்படும் சூழல் உருவாகிவிட்டது. தேவை இருக்கும் இடத்தில் தான் கைவரிசையும் காட்ட இயலும் என்று புற்றீசல் போல் கிளம்பியுள்ளன லோன் செயலிகள். உங்கள் ஃபோனில் மெசேஜ் இன்பாக்ஸ் அல்லது வாட்ஸ் அப் சேட் அல்லது இமெயிலுக்கு வரும் இதுபோன்ற ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்படாத வங்கியல்லாதா நிதி நிறுவனங்களின் செயலிகளை தரவிறக்கம் செய்தாலே போதும் நாம் அகப்பட்டுக் கொள்வோம். சில நேரங்களில் கால் சென்ட்டர் வாயிலாக பவ்யமாகப் பேசி கடன் வழங்குகிறோம் என்பார்கள்.
நெருக்கடியில் இருக்கும் நாமும் சரியென்று வட்டி விகிதம், பின் விளைவை யோசிக்காமல் வாங்கிவிடுவோம். சரி நிதிநிலைமை சீராகிவிட்டது என பணத்தைத் திருப்பித் தருகிறோம் என்று சொன்னாலும் 1 வருடம் வரை ரீபேமென்ட் கிடையாது என்பார்கள். இல்லாவிட்டால் ப்ரீ க்ளோஸருக்கு 10% அபராதம் என்பார்கள். ஒருவேளை ஒரு மாதம் இஎம்ஐ கட்டாவிட்டால் கந்துவட்டி, மீட்டர் வட்டி போல் வட்டிக்கு வட்டிக்கு அதற்கு ஒரு குட்டி என தீட்டுவார்கள். இப்படி லோன் செயலிகளில் லோன் வாங்கி லோ லோ என்று அலைபவர்களும் உண்டு, மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்தவர்களும் உண்டு.
இத்தனை பீடிகை எதற்கென்றால் கடன் வாங்குவதில் ஒரு ஒழுக்கம் வேண்டும் என்பதை புரிய வைப்பதற்கே. கல்வி, மருத்துவம், தொழில் என்று மிகமிக தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே கடன் வாங்குவதையும், அதை சரியாக திருப்பிச் செலுத்துவதையும் கடமை போல் செய்தால் எந்த நிதிச் சுழலிம் சிக்கி சீரழியாமல் இருக்கலாம். அதேபோல் நம்மால் திருப்பிச் செலுத்த இயலாத தொகையையும் ஒருபோதும் கடனாக வாங்கக் கூடாது.
மேலும் இதுபோன்ற சீன லோன் செயலிகள், இன்ஸ்டன்ட் லோன் செயலிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று காவல்துறையும் பலமுறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.