RCB Vs PBKS Final: பெங்களூரு Vs பஞ்சாப் ஃபைனல் - இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா? பேட்டிங்கா? பவுலிங்கா?
IPL 2025 Final RCB Vs PBKS : பெங்களூரு மற்றும் பஞ்சாப் இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025 Final RCB Vs PBKS: பெங்களூரு மற்றும் பஞ்சாப் இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியில், டாஸ் வெல்வதும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
புதிய சாம்பியன் கன்ஃபார்ம்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், ஐபிஎல் போட்டியின் ஆரம்ப காலத்தில் இருந்து பங்கேற்றும், 18 ஆண்டுகளிலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இதன் மூலம், இந்த முறை இரண்டு அணிகள் ஒன்று நிச்சயம் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது உறுதியாகும். இதனால், இந்த போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
15 ஆண்டுகளில் இரண்டாவது முறை:
கடந்த 15 ஆண்டுகளில் இதுவரை கோப்பையை வெல்லாத இரண்டு அணிகள், ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடுவது இது இரண்டாவது முறை மட்டுமே ஆகும். முன்னதாக பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் கடந்த 2016ம் ஆண்டு இறுதிப்போட்டியில் மோதின. அதில் முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 208 ரன்களை குவிக்க, இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதன்படி, முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஃபைனலில் சேஸிங்கில் சொதப்பும் ஆர்சிபி அணி:
ஆர்சிபி அணி ஏற்கனவே மூன்று முறை இறுதிப்போட்டியில் களம் கண்டு இருந்தாலும், மூன்றிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. குறிப்பாக அந்த அனைத்து ஃபைனல்களிலும் பெங்களூரு அணி சேஸிங்கே செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 2009ம் ஆண்டு இறுதிப்போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் நிர்ணயித்த வெறும் 144 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 2011ம் ஆண்டு சென்னை அணி நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கடைசியாக 2016ம் ஆண்டு இறுதிப்போட்டியில் 8 ரன்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
ஃபைனல்களில் தடுமாறும் கோலி
பெங்களூரு அணி விளையாடிய 3 இறுதிப்போட்டிகளிலும் கோலி விளையாடியுள்ளார். அதன்படி, 2009ம் ஆண்டு ஃபைனலில் 7 ரன்களும், 2011ம் ஆண்டு ஃபைனலில் 35 ரன்களையும் மட்டுமே சேர்த்தார். 2016ம் ஆண்டு ஃபைனலில் 54 ரன்களை சேர்த்து இருந்தாலும், கடினமான இலக்கை எட்ட அது போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குவாலிஃபையர் 1 வெற்றியாளர்கள் ஆதிக்கம்:
கடந்த 2011ம் ஆண்டு முதல் பிளே-ஆஃப் சுற்று ஐபிஎல் போட்டிகளில் பின்பற்றப்படுகிறது. அதன்படி, நடந்த கடந்த 14 ஃபைனல்களில் 11 முறை முதல் குவாலிஃபையரில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை வசப்படுத்தியுள்ளது. இன்னும் குறிப்பாக சொன்னால் 2018 முதல் 2014ம் ஆண்டு வரையில் நடந்த 7 இறுதிப்போட்டிகளில், முதல் குவாலிஃபையரில் வென்ற சென்னை (2018, 2021, 2023), மும்பை (2019,2020), குஜராத் (2022) மற்றும் கொல்கத்தா (2024) ஆகிய அணிகளே கோப்பையை கைப்பற்றியுள்ளன. இதேபாணியில் பெங்களூரு கோப்பையை கைப்பற்றுமா? என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
பஞ்சாப் - பெங்களூரு நேருக்கு நேர்:
இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 36 முறை நேருக்கு நேர் மோதி, தலா 18 முறை வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் மட்டும் 3 முறை மோதியதில் பெங்களூரு அணி 2 முறையும், பஞ்சாப் அணி ஒரே ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணி சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்கா? பவுலிங்கா?
ஐபிஎல் இறுதிப்போட்டிகளை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதுவரை நடந்து முடிந்த 17 ஃபைனல்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 முறையும், சேஸ் செய்த அணிகள் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
- 2008- சென்னையை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான்
- 2009 - பெங்களூருவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெக்கான் சார்ஜர்ஸ்
- 2010 - மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2011 - பெங்களூருவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2012 - சென்னையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா
- 2013 - சென்னையை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2014 - பஞ்சாபை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா
- 2015 - சென்னையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2016 - பெங்களூருவை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஐதராபாத்
- 2017 - புனேவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2018 - ஐதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2019 - சென்னையை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2020 - டெல்லியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
- 2021 - கொல்கத்தாவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2022 - ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்
- 2023 - குஜராத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
- 2024 - ஐதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா
ஃபைனலில் குஜராத் மைதானம் எப்படி?
இன்றைய இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இங்கு இரண்டு ஐபிஎல் இறுதிப்போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் சேஸ் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
- ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத்
- குஜராத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை
இதுபோக 2023ம் ஆண்டு நடந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும், இந்தியாவிற்கு எதிராக சேஸ் செய்த ஆஸ்திரேலியா அணியே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.




















