Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியா பாகிஸ்தானில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தியது என்பதை கீழே காணலாம்.

காஷ்மீரின் பகல்ஹாம் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக இந்தியா கருதியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அப்போதே இந்தியா உறுதியுடன் கூறியிருந்தது.
ஆபரேஷன் சிந்தூர்:
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய படைகள் விமான தாக்குதலை நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் இந்த தாக்குதலை இந்தியா நடத்தியது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அந்த 9 இடங்கள் எது? எது? என்பதை கீழே காணலாம்.
9 இடங்கள்
1. பகவல்பூர், சர்வதேச எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது ஜெய்ஸ்-இ- முகமது அமைப்பின் தலைமையகம் ஆகும்.
2. முரிட்கே, இந்த இடம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சம்பாவிற்கு எதிரே 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முகாம் ஆகும்.
3. பூஞ்ச் - ராஜோரியில் இருந்து 35 கி.மீட்டர் தொலைவில் உள்ள குல்பூர். இந்த இடம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது.
4. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் உள்ள தங்தாரில் உள்ள சாவாய். இங்குள்ள லஷ்கர் இ தொய்பா முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
5. ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பின் பிலால் முகாம்
6. இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 15 கி.மீ. தொலைவில் கோட்லியில் அமைந்துள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத முகாம்.
7. ராஜோரியின் எதிரே எல்லை கட்டுப்பாடு கோடு 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பர்னாலா முகாம்.
8. சம்பா -கதுவா எதிரே சர்வதேச எல்லையில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சர்ஜல் முகாம்.
9. சியால்கோட்டில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஹிஜிபுல் முஜாகிதினின் பயிற்சி முகாமான மெகமூனா முகாம்.
80 தீவிரவாதிகள் கொலை:
இந்த தீவிரவாதிகள் முகாம்கள் அனைத்தும் இந்திய ராணுத்தினரால் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தியா நடத்திய இந்த தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. பாகிஸ்தானின் விமானங்கள் அனைத்தும் திருப்பிவிடப்பட்டும், அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டும் வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இந்தியா நடத்திய இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.





















