Sophia Qureshi: இந்திய ராணுவத்தின் சிங்கப்பெண்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
Sophia Qureshi Indian Army: பாகிஸ்தான் தீவிரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திவரும் பரபரப்பான சூழலில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய வீரமங்கை சோபியா குரேஷியின் பின்னணி என்ன தெரியுமா.?

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலியான நிலையில், அதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா இன்று அதிகாலை முதல், நவீன ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த பதிலடி நடவடிக்கை குறித்து, வெளியுறவுத்துறை மற்றும் ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கமளித்தார். இந்தியாவின் இந்த வீரமகள் யார்.? தெரிந்துகொள்ளலாம்.
நாட்டின் குரலாக ஒலிக்கும் பெண்கள்
இன்றைய காலகட்டத்தில், இந்தியாவின் துணிச்சலான மகள்கள் எல்லைகளை காப்பது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நாட்டின் குரலாகவும் திகழ்ந்து வருகின்றனர். நாட்டில் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று கூறும் அளவிற்கு, எல்லா துறைகளிலும் அவர்கள் கோலோச்சி வருவது மட்டுமல்லாமல், உலக அளவிலும் இந்தியாவிற்கு பெருமையை தேடித் தருகின்றனர்.
இத்தகைய சூழலில், பாகிஸ்தான் பகுதியில் இந்தியா நடத்திவரும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் கொடுக்க, இந்திய ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முக்கியமான செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் கலந்துகொண்ட நிலையில், இரு வீர மங்கைகள் விளக்கம் கொடுத்தது, இந்தியாவின் பாதுகாப்பு சேவைகளில் அதிகரித்துவரும் பெண்களின் பங்களிப்பின் அடையாளமாக இருந்தது.
கர்னல் சோபியா குரேஷி யார்.?
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய கர்னல் சோபியா குரேஷி குஜராத்தைச் சேர்ந்தவர். உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர், ராணுவத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைப்புகளுக்கு பொறுப்பான சிக்னல் கார்ப்ஸைச் சேர்ந்தவர்.
2006-ம் ஆண்டில், அவர் காங்கோவில், ஐ.நா. அமைதி காக்கும் பணியின் கீழ் பணியமர்த்தப்பட்டார். 6 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிப் பணிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். சர்வதேச பணிகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் அமைதி காக்கும் பயிற்சிக் குழுவிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய ராணுவத்தில், ஆர்வம், கடின உழைப்பு மற்றும் தலைமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக கர்னல் சோபியா குரேஷி மாறிவிட்டார். பயிற்சிப் படை 18/18 நாடுகளின் பன்னாட்டு ராணுவப் பயிற்சியில், இந்திய தரப்பை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது, அவர் வெளிச்சத்திற்கு வந்தார். அந்த நேரத்தில், எந்த ஒரு நாட்டின் ராணுவப் பிரிவையும் வழிநடத்திய ஒரே பெண் இவர்தான். அவர், 40 வீரர்கள் கொண்ட இந்திய அணியை வழிநடத்தினார்.
அவருக்கும், ராணுவத்திற்கும் பழைய உறவு இருக்கிறது. அவருடைய தாத்தா ராணுவத்தில் பணியாற்றினார். அதேபோல், அவருடைய கணவர் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படையில் ஒரு அதிகாரி.
தற்போது, இந்த முக்கியமான தருணத்தில், ஆபரேஷன் குரேஷி குறித்து விளக்கமளித்தது, அவருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது என்றே கூறலாம்.
கர்னல் சோபியா குரேஷிக்கு ஒரு ராயல் சல்யூட்...





















