மூலவர் தரிசிக்க நாளையே கடைசி.. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து வந்த அறிவிப்பு.. ஏன் தெரியுமா ?
Kanchipuram Ekambaranathar Temple: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால், ஜூன் மாதம் நான்காம் தேதி வரை மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி, ஜூன் 04 ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏகாம்பர மூலவரை சந்திக்க வேண்டும் என்றால், கும்பாபிஷேகம் முடியும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்பு வாயந்த இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்து இதுவரை, 3 பாலாலயம் நடைபெற்று கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலாலயம் வரும் ஜூன் 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெற உள்ளது. மூலவர் கருவறையில் திருப்பணி செய்ய இருப்பதால், நாளை வரை ( ஜூன் 04 ஆம் தேதி) மட்டுமே ஏகாம்பரநாதரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதன் பின்பு மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகே மூலவரை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பக்தர்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாலாலய சிறப்பு அபிஷேகம்
யாக சாலையில் ஏகாம்பரநாதரை எழுந்தருளச் செய்வதற்காக அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்று, தினசரி 4 கால பூஜைகள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அத்திமரத்தால் செய்யப்பட்ட யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மட்டுமே அதன் பிறகு தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 9 நவகுண்டம் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் பாலாலய பூஜையினை வரும் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளனர்.
பாலாலய சிறப்பு அபிஷேகம் ஜூன் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது .கோயில் திருப்பணிக்காக அரசு நிதி ரூ.12.75 கோடி, ஆணையர் பொது நல நிதி ரூ.1.74 கோடி, திருக்கோயில் நிதி ரூ.4.61 கோடி, உபயதாரர் நிதி ரூ.32.14 லட்சம் உட்பட மொத்தம் 28.48 கோடி மதிப்பில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிகள் பெருமளவு நிறைவு
திருக்கோயிலில் அமைந்துள்ள பல்லவகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம் ,1000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல்,கம்பா நதி தீர்த்தம் பழுது பார்த்தல்,அபிஷேகநீர் மற்றும் மழைநீர் சிவகங்கை தீர்த்துக்குளத்துக்கு வரும் வகையில் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் பெருமளவு நிறைவு பெற்று விட்டன.
தெற்கு ராஜகோபுரம் பழுது பார்த்தல், 3 ஆம் பிரகாரம் தரைதளத்தில் கருங்கல் அமைக்கும் பணி,4 மற்றும் 3 ஆம் பிரகாரத்தில் மதில் சுவர் அமைக்கும் பணியை பழமை மாறாமல் புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. நடராஜர் சந்நிதியும்,1000 கால் மண்டப உட்புற பகுதி பழுது பார்த்தல் பணிகள் 90 சதவிகிதம் நிறைவு பெற்று பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
எப்போது கும்பாபிஷேகம் நடைபெறுகிறது ?
கோயில் ராஜகோபுரம் மீண்டும் ஒரு முறை வர்ணம் தீட்ட வேண்டிய நிலையில் இருந்து வருகிறது. கும்பாபிஷேக திருப்பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடித்து நிகழாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்தார்.




















