தீபிகா படூகோனின் கோரிக்கை நியாயமானதுதான்...வெறுப்பிற்கு இடையில் மணிரத்னம் ஆதரவு
8 மணி நேரம் பணி நேரம் கேட்ட தீபிகா படுகோனின் கோரிக்கை நியாயமானதுதான் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தில் இருந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் விலகியதில் இருந்து சமூக வலைதளங்களில் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபிகாவுக்கு ஆதரவாக இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார்.
பிரபாஸ் படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோன்
அர்ஜூன் ரெட்டி , அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா தற்போது பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தீபிகா படூகோன் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்த நிலையில் இயக்குநருடன் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து அவர் விலகினார். அண்மையில் தாயாகி இருக்கும் தீபிகா 8 மணி பணிநேரம் மற்றும் படத்தின் லாபத்தில் ஷேர் கேட்டதாகவும் அவரது நிபந்தனைகள் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு ஒத்து வராததால் படத்தில் இருந்து தீபிகா விலகியதாக கூறப்பட்டது. தொடர்ந்து அனிமல் படத்தில் நடித்த திருப்தி டிம்ரி இந்த படத்தின் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
பிரபாஸ் படத்தில் இருந்து தீபிகா விலகியதும் ஸ்பிரிட் படத்தின் கதை குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியது. மேலும் படத்தில் ஆபாச காட்சிகள் நிறைய இருந்ததால் இந்த படத்தில் இருந்து தீபிகா விலகினார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இவை எல்லாம் தான் நடிக்காததால் தீபிகா தனது பி.ஆர் குழு வைத்து பரப்பும் நெகட்டிவ் செய்திகள் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
அதே நேரம் பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா லாபத்தில் பங்கு கேட்கும் தகுதி தனக்கு இருப்பதாகவும் தனக்கான பணி நேரத்தை தீர்மானிக்கும் இடத்தில் தான் இருப்பதாகவும் கூறி இருந்தார். இதனால் அவர் மீது நெட்டிசன்கள் வன்மத்தை வெளிப்படுத்த தொடங்கினார்கள்.
தீபிகாவுக்கு மணிரத்னம் ஆதரவு
தற்போது தீபிகா படுகோனுக்கு ஆதரவாக தக் லைஃப் இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார். "தன்னுடைய பணி நேரத்தை தீர்மானிக்கும் இடத்தில் தீபிகா இருக்கிறார் என்பது நல்ல விஷயம். இயக்குநர்களும் இதை கருத்தில் கொள்ள வேண்டும். தீபிகாவைப் பார்த்து இன்னும் பலர் தங்களது தேவைகளை கேட்க முன்வருவார்கள். இது ஒரு நியாயமான கோரிக்கை தான். " என மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.





















