Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor Indian Army: சியால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி தீவிரவாத முகாம் குண்டு வீசி அழிக்கப்பட்டது.

பஹல்காம் தாக்குதலில் ஏப்ரல் 22 அன்று 26 அப்பாவிப் பொது மக்களைக் கொன்ற தீவிரவாதத்துக்கான கொடிய பதிலடியாக, இந்திய முப்படை ராணுவமும் இணைந்து இன்று (மே 7) நள்ளிரவில் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK) பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கின.
குறிப்பாக இந்திய ராணுவம் 9 தீவிரவாத தளங்களைத் தாக்கியதாகவும், பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 நிமிடங்களுக்கு தாக்குதல்
இதுகுறித்து இந்திய கர்னல் சோஃபியா குரேஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ’’பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப் படவில்லை. மே 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்களுக்கு, 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. நம்பகமான உளவுத்துறை தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்தத் தாக்குதல் நடந்தது. குறிப்பாக சியால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி தீவிரவாத முகாம் குண்டு வீசி அழிக்கப்பட்டது. மொத்தமாக பகவல்பூர், முசாராபாத், கோட்லி, முரிட்கே, பர்னாலா, தெஹ்ரா கலன் என்பன உள்ளிட்ட 9 தீவிரவாத முகாம்கள் ஏவுகணைகள் மூலமாக தாக்கி அழிக்கப்பட்டன.
பதில் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது’’ என்று சோஃபியா குரேஷி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறும்போது, ’’பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதி வழங்கும் வகையில் இந்திய ராணுவப் படைகள் இந்தத் தாக்குதலை நடத்தின.
பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில்..
இதில், 9 தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு, வெற்றிகரமாக அழிக்கப்பட்டன. பொது மக்களின் வீடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் மக்கள் உயிர் பாதிக்கப்படாத வகையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன’’ என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் இந்திய ராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ளன.





















