Crime: பெண்கள் விடுதி குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தை! பெண் விடுதி பராமரிப்பாளர் செய்த செயல்!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பெண்கள் விடுதிக்கு அருகிலுள்ள குப்பைத் தொட்டியில் ஆதரவற்ற நிலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி ராமானுஜ கூட தெருவில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இங்கு ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் இண்டஸ்ரியல் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் பெண்களே தங்கி பணிக்கு சென்று வந்துள்ளது. இந்த பெண்கள் விடுதியில் தேங்கும் குப்பைகள் அனைத்தும் விடுதிக்கு அருகிலுள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் கொட்டப்பட்டு வந்தது.
குப்பைத் தொட்டியில் பெண் குழந்தை:
இந்தநிலையில், குப்பைகளுக்கு நடுவே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்க தொடங்கியுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், உடனடியாக விடுதி பராமரிப்பாளர் யுவராணி விடுதியின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இன்று குப்பைகளுக்கு நடுவே கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் விடுதி பராமரிப்பாளர் ஓடி சென்று தூக்கியுள்ளார்.
குழந்தையை தூக்கியபோது உடல் முழுவதும் எறும்புகள் மொய்த்தப்படி இருந்துள்ளது. குழந்தை கதறி அழுதபடியே இருக்க, விடுதி பராமரிப்பாளர் உடனடியாக குழந்தையை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகளை நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை:
இதுபற்றி தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர், குழந்தையை குப்பை தொட்டியில் வீசியது யார்? எதனால் இங்கு கொண்டு வந்து போட்டப்பட்டது? என அந்த பகுதியில் உள்ள சிசிடிவு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி வருவாய்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பெண்கள் விடுதிக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்கள் விடுதியில் எவ்வளவு பெண்கள் தங்கி இருக்கிறார்கள், அவர்களது விவரம், வேலைக்கு சென்றவர்கள், தற்போது விடுதியில் இருந்து சென்றவர்கள் என அனைவரது விவரங்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வெளியாட்கள் யாரும் விடுதியின் உள்ளே வர முடியாத நிலையில் அங்கு தங்கி உள்ளவர்களே அந்த குழந்தையை வீசி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து பெண் குழந்தையை மீட்ட யுவராணி கூறுகையில், “விடுதி வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. பூனைதான் குழந்தைபோல் அழுவதாக எண்ணி நாங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தோம். குழந்தையின் உடலில் எறும்புகள் அதிகளவில் மொய்க்க தொடங்கியதால், ஒரு கட்டத்தில் வலியால் குழந்தை அலறி துடித்தது. சத்தம் அதிகமாக வந்ததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அழகான பெண் குழந்தையை வீசி இருப்பது தெரிந்தது.
எறும்புகள் கடித்ததால் உடல் முழுவதும் தடிப்புகள் ஏற்பட்டு இருந்ததால் குழந்தைக்கு எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எலிகளுக்கு மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்ததால் இந்த குழந்தைக்கு 'அதிர்ஷ்ட லட்சுமி' என பெயர் வைத்துள்ளோம். தற்போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் 15 நாட்கள் இன்கு பேட்டரில் வைக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்” என தெரிவித்தார்.