கோயில் உண்டியலை உடைத்து தப்ப முயன்ற கொள்ளையர் - ட்விஸ்ட் கொடுத்த போலீசார்...!
சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த உண்டியல் பணம் 2 லட்சம் ரூபாயை மீட்டுள்ளனர்.
சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மூட்டையில் கட்டி வைத்திருந்த உண்டியல் பணம் 2 லட்சம் ரூபாயை மீட்டுள்ளனர்.
ஆபத்து காத்த விநாயகர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மையப்பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தெற்கு கோபுர வாசலில் வலது புறம் ஆபத்து விநாயகர் கோயிலும் இடப்புறம் முருகன் கோயிலும் உள்ளது. இந்த ஆபத்து விநாயகர் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தாங்கள் வாகனம் வாங்கிய உடன் கோயிலுக்கு வந்து பூஜை செய்து செல்வார்கள், அதேபோன்று வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் ஏராளமானோர் தங்கள் வாகனங்களுடன் இங்கு வந்து பூஜை செய்து செல்வார்கள்.
கோயில் பூட்டை உடைத்து திருட்டு
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நேற்று நள்ளிரவு வெளிப்புறம் உள்ள சில்வர் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து சாக்கு மூட்டையில் கட்டி தப்பி செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக இரவு ரோந்து சென்ற போட்ரோல் போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமை காவலர் ஸ்டாலின் ஆகியோர் கோயில் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்று பார்த்தனர்.
தப்பியோடிய கொள்ளையர்கள்
அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பியோடியுள்ளார். அங்கே இருந்த மற்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை கண்ட காவல்துறையினர் அதனை சோதனை செய்தனர். அதில் கோயில் உண்டியலை உடைத்து எடுக்கப்பட்ட பணம் இருந்ததை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த 42 வயதான கொளஞ்சி, அவரது சகோதரர் 35 வயதான முத்து என்பது தெரியும் வந்தது. இவர்களிடம் இருந்து கோயில் உண்டியலில் கொள்ளையடித்த சுமார் 2 லட்சம் ரூபாய் காசுகள் மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு வீட்டில் திருட முயற்சி
இதனிடையே உண்டியலை உடைத்து திருடிக் கொண்டிருந்தபோது போலீசாரை கண்டதும் கோயிலில் இருந்து தப்பி ஓடிய மூன்றாவது நபர் சீர்காழி விளந்திட சமுத்திரம் வில்வா நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளரை தாக்கியுள்ளார். அதில் லேசான காயம் அடைந்த அவர் சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க, காவல் ஆய்வாளர் புயல். பாலசந்திரன், சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் காயத்ரி, தலைமை காவலர் அன்பரசன், காவலர்கள் மணிகண்டன், ரஞ்சித், ரம்யா தனிப்பிரிவு காவலர் சார்லஸ் ஆகியோர் விளந்திடசமுத்திரம் பகுதிக்கு உடனடியாக நள்ளிரவில் சென்று தப்பி ஓடிய நபரை தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது அவர் விளந்திடசமுத்திரம் அஞ்சலை நகர் பகுதியை சேர்ந்த 29 வயதான இலக்கியன் என்பதும் தெரியவந்தது. இந்த மூன்று பேரையும் கைது செய்த சீர்காழி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.