Crime: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
போளூர் பகுதியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது (45). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். திருமணம் ஆனவர். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி அவரது வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டு இருந்த 4 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை டி.வி. பார்க்க கூறியுள்ளார். அதன் பிறகு சிறுமியிடம் ஏழுமலை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளார். சிறுமியிடம் இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்றும், அதையும் மீறி கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பாட்டி சிறுமியை தேடி சென்றார். அப்போது ஏழுமலையின் வீட்டில் இருந்த சிறுமியை அவருடைய பாட்டி அழைத்து சென்றுள்ளார். வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது சிறுமியை பிரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலியல் வன்கொடுமையால் சிறுமி பாதிக்கப்பட்டதை உறுதி செய்தனர். பின்னர் மருத்துவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அவருடைய பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது ஏழுமலை தன்னிடம் நடந்துகொண்ட கொடூரத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி பரபரப்பு தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கூலி தொழிலாளி ஏழுமலைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்த ஏழுமலையை காவல்துறையினர் கைது செய்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.