Rahul Gandhi Priyanka Gandhi | ராகுலின் வயநாடு ப்ளான்! MEETING-ல் பிரியங்கா! ராகுல் பேசியது என்ன?
வயநாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து ஆன்லைன் மீட்டிங்கில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. வயநாடு மக்களுடனான நெருக்கமான உறவு மட்டுமல்லாமல், பிரியங்கா காந்திக்காகவும் ராகுல் தீவிரமாக களப்பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காணாமல் போன நபர்களை தேடும் பணி தற்போது வரை நடந்து வருகிறது. ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து நிவாரணம் மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலையுடன் உள்ளனர். வயநாட்டில் நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில், நேரடியாக களத்திற்கு சென்றனர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்தநிலையில் ராகுல்காந்தி, கேரள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து ஆன்லைன் மீட்டிங்கில் நிலவரம் தொடர்பாக கேட்டறிந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் படிப்படியாக மீண்டு வந்தாலும், விவசாயம் மற்றும் சிறு,குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் ராகுலிடம் தகவல் கொடுத்தனர். நிலச்சரிவால் வயநாடு சுற்றுலாவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வயநாடு பாதுகாப்பான இடம்தான் என்பதை மக்கள் மனதில் பதியவைத்து சுற்றுலாவுக்கு வர வைக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார் ராகுல்காந்தி.
2019 மற்றும் 2024 மக்களவை தேர்தல்களில் ராகுல்காந்திக்கு வெற்றியை தேடி கொடுத்தது வயநாடு தொகுதி. 2019 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தாலும் வயநாடு தொகுதி அவரை காப்பாற்றியது. 2024 தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி களமிறங்கவிருக்கிறார். ராகுல்காந்திக்கு வயநாடு தொகுதியுடன் நெருக்கமான உறவு இருப்பதால், பிரியங்கா காந்தியை அந்த தொகுதியில் களமிறக்கியுள்ளார்.
மக்களுடனான நெருக்கமான உறவு மட்டுமல்லாமல், பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் களமிறங்குவதால் ஆரம்பம் முதலே ராகுல்காந்தியே நேரடியாக அனைத்து வேலைகளையும் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.