Trump Vs Musk: அதிபரே, கடைசில எனக்கே ஆப்பு வச்சுட்டீங்களே.!! ட்ரம்ப் போட்ட வரியால் புலம்பும் எலான் மஸ்க்...
தன் வினை தன்னைச் சுடும் என்பது போல், மற்ற நாடுகளுக்கு வரியை போட்டுத் தாக்கும் ட்ரம்ப், இன்று அறிவித்த புதிய வரி, அவருடைய அரசின் முக்கிய நிர்வாகியான எலான் மஸ்க்கிற்கே வினையாக முடிந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல்வேறு வரிகளையும் அறிவித்து வருகிறார். அப்படி இன்று அவர் அறிவித்த ஒரு வரி, அவருடைய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் எலான் மஸ்க்கிற்கே பிரச்னையை கொடுத்துள்ளதாக, அவரே தெரிவித்துள்ளார்.
புதிய வரியை அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ மட்டுமல்லாமல் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடகளுக்கும் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்திவருகிறார். அந்த வகையில், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள், இலகு ரக ட்ரக்குகள், முக்கிய ஆட்டோமொபைல் உதிரிப் பாங்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக தற்போது ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த 26-ம் தேதியே இதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டுவிட்டதாகவும், ஏப்ரல் 3-ம் தேதியிலிருந்து புதிய வரி அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
புதிய வரி குறித்து கார் நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் என்ன கூறினார்.?
ட்ரம்ப்பின் இந்த வரி அறிவிப்பைத் தொடர்ந்து சிலிகான் வேலி டெஸ்லா கார் உரிமையாளர்கள், தங்கள் சமூக வலைதளப் பதிவில், அமெரிக்காவில் தயாரிக்கப்படாத கார்களுக்கு அதிபர் ட்ரம்ப் 25 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் டெஸ்லா பயனடையலாம் என கூறியுள்ளனர்.
இந்த பதிவை மேற்கோள் காட்டி, டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், “தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வரி மற்ற நாடுகளிலிருந்து வரும் டெஸ்லா காரின் உதிரிபாகங்களின் விலையை பாதிக்கும் என்றும் அந்த செலவு பாதிப்பு சாதாரணமானது அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளுக்கு வரிகளை போட்டு தாக்குகிறேன் என ட்ரம்ப் ஏராளமான வரிகளை அறிவித்து வருகிறார். ஆனால், அந்த வரி தன்னுடைய சொந்த நாட்டு நிறுவனத்தையே, அதுவும் தன்னுடைய அரசாங்கத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் மஸ்க் போன்ற ஒருத்தருக்கே பாதிப்பாக முடியும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். இதற்கு, ட்ரம்ப் எந்த மாதிரியான ரியாக்ஷனை கொடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்.

