Kanimozhi DMK Parliamentary leader | கனிமொழி தான் தலைவர்!ஸ்டாலின் போடும் கணக்கு! அதிரும் டெல்லி
திமுக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராகி டெல்லியின் திமுக முகமாக உயர்ந்துள்ளார் கனிமொழி. டி.ஆர்.பாலு வகித்து வந்த பதிவிக்கு கனிமொழியை மு.க.ஸ்டாலின் டிக் செய்ததன் பின்னணியில் முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தி.மு.க நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைவரும்,முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வைப்புத்தொகையை இழக்கும் படி பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் தனக்கு மட்டுமின்றி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காகவும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அவர்களின் வெற்றிக்கும் பங்காற்றியுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில், 72.65 சதவீத வாக்குகளைப் பெற்று அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அவரது அரசியல் செல்வாக்கை நிலைத்நிறுத்துவதாக அமைந்தது.
2019 முதல் 20204 வரை மக்களவையின் திமுக தலைவராக டி.ஆர்.பாலுவும் துணைத்தலைவராக கனிமொழி கருணாநிதியும், கொறடாவாக ஆ.ராசாவும் செயல்பட்டனர்.
அப்பதவியை வகித்து வந்த கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு மீண்டும் தனக்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். டி.ஆர்.பாலு நீண்ட நெடுங்காலமாக டெல்லி அரசியலில் கோலோச்சி விட்டார்.
புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டும் என்று முடிவுஎடுத்த மு.க.ஸ்டாலின், அதனால், மக்களவை குழு தலைவராக கனிமொழி தான் வர வேண்டும் என விரும்பினார். மேலும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கனிமொழி தான் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நேரத்தில், இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் வலுவான ஒருங்கிணைப்பை முதலமைச்சர் வலியுறுத்தி வரும் நிலையில், கனிமொழி கருணாநிதியின் இந்த முக்கியத்துவம் அவரது தலைமைத்துவ திறன் மற்றும் தேர்தல் வெற்றியை விளக்குகிறது. வரும் தேர்தலில் அவரது புதிய பொறுப்பு, கட்சியில் திட்டமிடல் பணிகள் மற்றும் கூட்டணியை வலுப்படுத்தும் வேலைகளை மேம்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீடை கனிமொழி தான் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் பேசி முடித்தார். கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸின் செயல் தலைவா் சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் பெண் தலைவர்கள் கலந்துகொண்டனர். அணைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்தது கனிமொழி கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.