காஞ்சிபுரம் மாணவன் ஜெய்விக்: பாக்ஸிங் போட்டியில் வெள்ளி வென்று சாதனை! ஒலிம்பிக்கில் தங்க கனவு!
"தமிழ்நாடு மாநில அளவிலான MASI 2வது பாக்ஸிங் கப் – 2026 போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று காஞ்சிபுரம் பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்."

"தமிழ்நாடு மாநில அளவிலான MASI 2வது பாக்ஸிங் கப் – 2026 போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று காஞ்சிபுரம் பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். பள்ளி மாணவனின் சாதனையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பாராட்டினார்."
MASI 2-வது பாக்ஸிங் கப் – 2026
காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதியினரின் மகனான ஜெய்விக், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே குத்துச்சண்டை விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் NA Boxing Club-இல் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தொடர்ந்து பதக்கங்களையும் வென்று வருகிறார்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கத்தின் அங்கீகாரத்துடன், சென்னை அத்திப்பட்டு கலைஞர் அரங்கத்தில் மாசி விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் “MASI 2வது பாக்ஸிங் கப் – 2026” என்ற மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை
இந்தப் போட்டியில் 24–26 கிலோ எடை பிரிவில் காஞ்சிபுரம் NA Boxing Club சார்பில் கலந்து கொண்ட பள்ளி மாணவன் ஜெய்விக், சிறப்பாக விளையாடி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவனின் சாதனையை அறிந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், இன்று தனது இல்லத்தில் ஜெய்விக்கை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார். இந்நிலையில், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக குத்துச்சண்டையில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதே தனது வாழ்நாள் இலக்கும் கனவும் என மாணவன் ஜெய்விக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















