Olympic Bouquet | ஒலிம்பிக் பதக்கத்துடன் கொடுக்கப்படும் பூச்செண்டு : உருக்கமான பின்னணி தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு பதக்கத்துடன் சேர்த்து பூச்செண்டும் வழங்கப்படுகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிற்கு இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. மகளிர் 49 கிலோ பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். வழக்கமாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்பவர்களுக்கு பதக்கத்துடன் சேர்த்து பூச்செண்டு ஒன்றும் பரிசாக வழங்கப்படும்.
அந்தவகையில் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்படும் பூச்செண்டுகளுக்கு பின்னால் மிகவும் உருக்கமான கதை ஒன்று உள்ளது. அது என்ன?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் நபர்களுக்கு பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பூச்செண்டு வழங்கப்பட்டுகிறது. இந்த பூக்களில் ஒருவித சிறப்பு அம்சமும் இல்லை. ஆனால் இந்த பூக்கள் மலர்ந்த இடங்கள் தான் சிறப்பு அம்சம். அதாவது இந்தப் பூக்கள் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள இவாட், ஃபுகுஷிமா, மியாகி ஆகிய மூன்று இடங்களில் இருந்து வந்துள்ளன.
2011ஆம் ஆண்டு இந்த மூன்று இடங்களில் நிலநடுக்கம் மற்று சுனாமி ஆகியவற்றால் பெருமளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. அத்துடன் அதன்பின்னர் ஃபுகுஷிமா அணுவுலை வெடித்து விபத்தும் ஏற்பட்டது. இந்த பேரிடராலும் பலரும் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களை நினைவூட்டும் வகையில் அந்த இடங்களிலிருந்து இந்தப் பூக்கள் கொடுக்கப்படுகின்றன.
குறிப்பாக மஞ்சள் பூக்கள் மியாகி நகரத்தில் பேரிடால் குழந்தைகளை இழந்த பெற்றோர்களால் அவர்களின் குழந்தைகளின் நினைவாக வளர வைக்கப்பட்டதாகும். அதேபோல் நீல நிறத்திலான பூக்கள் ஃபுகுஷிமா பகுதியில் பேரிடருக்கு பின்னால் வளர்க்கப்பட்ட பூ வகையாகும். இந்தப் பகுதியில் கடந்த 2014 ஆண்டு முதல் இந்த வகை பூக்களை வளர்க்க அப்பகுதியினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சுனாமியால் அதிக பாதிப்பு அடைந்த கடற்பகுதியான ஐவாட் பகுதியில் நீல பூக்கள் வளர்க்கப்பட்டதாகும்.
டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்காக கிட்டதட்ட 5000 பூச்செண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு பேரிடர் பாதித்த இடங்கள் தற்போது மீண்டு வந்துள்ளதையும் அந்த பேரிடரில் உயிரிழந்தவர்களின் நினைவாகவும் இது தரப்படுவதாக ஜப்பான் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பூச்செண்டுகளை நிப்பான் பூக்கள் கவுன்சில் என்ற அமைப்பு வாங்கி பூச்செண்டுகளாக தொடுத்து தருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டு இந்தாண்டு நடைபெறுகிறது. ஆகவே இந்தாண்டு பேரிடர் காலத்தில் ஜப்பானில் உயிரிழந்த மக்களை பேரிடர் காலத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் நினைவுகூர வேண்டும் என்று ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:சுதந்திர தினத்தன்று பிரதமர் வீட்டில் விருந்து! - ஒலிம்பிக் வீரர்களுக்கு அழைப்பு