KKR Vs PBKS, IPL 2024: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பஞ்சாப்? கொல்கத்தா உடன் இன்று பலப்பரீட்சை
KKR Vs PBKS, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
KKR Vs PBKS, IPL 2024: பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 41 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
பஞ்சாப் - கொல்கத்தா மோதல்:
கொல்கத்தாவில் உள்ள இடர்ன் கார்டன் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கொல்கத்தா அணியோ விளையாடிய போட்டிகளிலும் ஐந்தில் வென்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலும் வென்று தனது இடத்தை உறுதி செய்ய தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் வென்று, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியுற்ற பஞ்சாப் அணி, இன்றைய போட்டி மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டுகிறது அதோடு, நடப்பு தொடரில் ஏற்கனவே கொல்கத்தா அணியிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி தரவும் தயாராகி வருகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை இந்த அணி வெளிப்படுத்தி வருகிறது. அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். குறிப்பாக பவர்பிளேயில் சுனில் நரைன் பஞ்சாப் அணிக்கு கடும் நெருக்கடி தரக்கூடும். பந்துவீச்சிலும் நல்ல லைன் - அப்பை கொல்கத்தா அணி கட்டமைத்துள்ளது. பஞ்சாப் அணி ஸ்டார் பிளேயர்கள் பெரிதாக இல்லை. ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக மாறியுள்ளனர். மற்ற விரர்களும் பொறுப்புடன் விளையாடி முழுமையாக முயற்சித்தால் மட்டுமே பஞ்சாபிற்கு வெற்றி சாத்தியம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 11 முறையும், கொல்கத்தா அணி 21 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 214 ரன்களையும், குறைந்தபட்சமாக 119 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 245 ரன்களையும், குறைந்தபட்சமாக 109 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் வழக்கம்போல் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது சிறந்த முடிவாகும்.
உத்தேச அணி விவரங்கள்:
கொல்கத்தா: சுனில் நரைன், பில் சால்ட், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ரின்கு சிங், ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
பஞ்சாப்: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா