GT vs KKR: ருத்ரதாண்டவம் ஆடிய விஜய்சங்கர்.. அதிரடி காட்டிய சாய்சுதர்சன்..! கொல்கத்தாவிற்கு 205 ரன்கள் டார்கெட்..!
GT vs KKR IPL 2023: கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்த குஜராத் அணி.
ஐபிஎல் போட்டியின் 16வது சீசன் கடந்த மாத இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஹோம் மற்றும் அவே முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில் இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
இந்நிலையில் இன்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வழிநடத்தினார். டாஸ் வென்ற அவர் இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்றார். மிகவும் வலுவான பேட்டிங் லைன் - அப்பை வைத்துள்ள, குஜராத் அணி சிறப்பாக தனது ஆட்டத்தினை தொடங்கியது.
தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது. விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் குஜராத் அணி தனது சொந்த மண்ணில் ரன் குவிப்பதை குறைக்கவில்லை. அந்த அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி நிதானமாக ஆடிவந்த கில் சுனில் நரேன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 88 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர்களை கொல்கத்தாவின் சுனில் நரேன் சீரான இடைவெளியில் வீழ்த்தினார். அதன் பின்னர் களமிறங்கிய அபினவ் மனோகர் உமேஷ் யாதவ் பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார்.
சிறப்பாக விளையாடிய குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒரு இடத்தில் கூட தடுப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. அபினவ் மனோகர் சுயாஷ் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆக, அதன் பின்னர் தமிழ்நாட்டு வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கர் கைகோர்த்தனர். இருவரும் சிறப்பாக விளையாடினர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த கொல்கத்தா அணி ஏதேதோ முயற்சி செய்தும் எளிதில் பலம் கிடைக்கவில்லை. ஆனால் குஜராத் அணியினர் தொட்டதெல்லாம் பொன் என்பதைப் போல் சிறப்பாக விளையாடி வந்தனர். சாய் சுதர்சன் 34 பந்தில் அரைசதம் விளாசினார்.
சீரான ரன் குவிப்பில் ஈடுபட்ட குஜராத் அணி 17 ஓவர்களில் 151 ரன்களை எட்டியது. அதன் பின்னர் சாய் சுதர்சன் தனது விக்கெட்டை பறிகொடுக்க, களத்துக்கு மில்லர் வர, விஜய் சங்கரும் மில்லரும் அடித்து ஆடினர். கடைசி ஓவரில் விஜய் சங்கர் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இறுதி வரை களத்தில் இருந்த அவர் 24 பந்தில் 63 ரன்கள் குவித்து இருந்தார். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.